நடிப்பு, கார் ரேஸ், பைக் ரேஸ் என தன்னை எப்போதும் பிஸியாக வைத்துக்கொள்கிறவர் நடிகர் அஜித்குமார். விடாமுயற்சி, குட் பேட் அக்லி என அஜித் நடிப்பில் அடுத்தடுத்து இரு திரைப்படங்கள் இந்த வருடம் வெளியாகி வரவேற்பை பெற்றன.
இந்தநிலையில், திரைத்துறை மற்றும் சர்வதேச கார் பந்தயத்தில் சிறந்து விளங்கியதற்காக நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. டெல்லியில் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அஜித்துக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
இந்நிலையில் நடிகர் அஜித் இன்று காலை திடீரென ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி அவரது தரப்பில் விசாரித்தபோது, நடிகர் அஜித் பத்மபூசன் விருது பெறுவதற்காக டெல்லிக்கு சென்றுவிட்டு நேற்று சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் அஜித்துக்கு காயம் ஏற்பட்டது. இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் சிரித்தபடி கடந்து சென்றார். இந்த நிலையில் காயம் காரணமாக ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து இன்று மாலை வீடு திரும்புவார் என கூறினர்.
மற்றுமொரு தகவல் : வழக்கமான ஜென்ரல் செக்-அப்-க்கு சென்றிருக்கிறார் என்றும் அவருக்கு ஒரு சில பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. எனினும், அஜித் தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.