உத்தரகாண்ட் மாநிலம் மசூர் பகுதியில் 2 பேர் சாலையோரத்தில் அமர்ந்து சுடிதார் விற்பனை செய்து வந்தனர். இவர்கள் இருவரும் காஷ்மீரை சேர்ந்தவர்கள். அப்போது அங்கு வந்த உள்ளூர் இளைஞர்கள் வியாபாரிகளை அங்கிருந்து செல்லும்படி கட்டாயப்படுத்தினர். அதில் ஒரு இளைஞர் வியாபாரிகளை சரமாரியாக அடித்ததுடன் ஆதார் அட்டையை காண்பிக்கும்படி வற்புறுத்தினார்.
அதன்படி வியாபாரிகள் ஆதார் அட்டையை காண்பித்தும் தொடர்ந்து இளைஞர்கள் வியாபாரிகளை தாக்கி அந்த இடத்திலிருந்து விரட்டிவிட்டனர். இச்சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் சுராஜ் சிங், பிரதீப் சிங் மற்றும் அபிஷேக் உனியால் ஆகிய 3 இளைஞர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தங்களது செயலுக்காக மன்னிப்பு கேட்கிறோம் எனக் கூறிவிட்டனர். அந்த இளைஞர்கள் எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாது என உறுதி அளித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.