அடுத்தடுத்து சோகம்... 3 நாட்களில் கள்ளச்சாராயத்துக்கு 8 பேர் பலி!
Dinamaalai May 01, 2025 02:48 AM

ராஜஸ்தான் மாநிலத்தில்  3 நாட்களில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் பலியாகியிருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  அல்வார் மாவட்டத்திலுள்ள பையின்ட்பூர் மற்றும் கிஷான்பூர் ஆகிய கிராமங்களில் பல காலமாக கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பலமுறை  காவல் துறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.  
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 26 ம் தேதி  கள்ளச்சாராயம் குடித்த பையின்ட்பூரைச் சேர்ந்த சுரேஷ் வால்மிகி (வயது 45) என்பவர் பலியானார். அதைத் தொடர்ந்து  ஏப்ரல் 27ம் தேதி  கிஷன்பூரைச் சேர்ந்த ராம் கிஷோர் (47) மற்றும் ராம் குமார் (35) கள்ளச்சாராயம் குடித்ததால் ஏற்பட்ட பாதிப்பினால் பலியானார்.

இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 28 ம் தேதி நேற்று  மட்டும் ஒரே நாளில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  உயிரிழந்தவர்கள் அனைவரும் அந்த இரு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
மேலும், உயிரிழப்புகள் ஏற்படத் தொடங்கி 3 நாட்கள் கழித்தே மாவட்ட நிர்வாகம் அங்கு வந்ததாகவும், அவர்களது அலட்சியப் போக்கே இந்தச் சம்பவத்துக்கு முக்கிய காரணம் என அக்கிராமவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் இது குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.