கார் நிறுத்துவது தொடர்பாக பிக்பாஸ் புகழ் நடிகர் தர்ஷனுக்கும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியின் மகன் ஆதிச்சூடிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் மற்றும் நீதிபதியின் மகன் காயமடைந்தனர். நண்பருடன் சேர்ந்து தர்ஷன், தங்களை தாக்கியதாக நீதிபதியின் மகன், அவரது மனைவி மற்றும் மாமியார் தரப்பில் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
அதேபோல, நடிகர் தர்ஷன் தரப்பிலும் புகார் அளிக்கபட்டிருந்தது. இந்த இரு புகார்களின் அடிப்படையிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில், தர்ஷன் தரப்பிற்கும், தங்கள் தரப்பிற்கும் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதால் தங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நீதிபதியின் மகன் ஆதிச்சூடி மற்றும் அவரது மனைவி லாவண்யா, மாமியார் மகேஸ்வரி தரப்பிலும், நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் தரப்பிலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யபட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், சமரச மனுவை ஏற்று நடிகர் தர்ஷன், அவரது நண்பர் மற்றும் நீதிபதியின் மகன் மற்றும் மனைவி, மாமியார் மீது பதியப்பட்ட இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.