"இதுபோன்ற டி20 தொடர்களில், ஏதாவது ஒரு சில குறைபாடுகள் இருந்தால் பரவாயில்லை, சமாளிக்கலாம். ஆனால் பெரும்பாலான வீரர்கள் நன்றாக விளையாடவில்லை என்றால் என்ன செய்ய முடியும். அணியில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இந்த முறையிலேயே போட்டிகளை விளையாட முடியாது."
இவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்த பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பொறுமை இழந்து பேசிய வார்த்தைகள்.
சிஎஸ்கே அணி தொடர்ந்து 2வது முறையாக ஐபிஎல் டி20 தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறவுள்ளது. அதிலும் ஐபிஎல் சீசனின் நடுப்பகுதியிலேயே சிஎஸ்கே அணியின் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை.
சிஎஸ்கே அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி, அதில் 2 வெற்றிகள் 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. அணியின் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.302 என்று மோசமாக இருக்கிறது.
ப்ளே ஆஃப் வாய்ப்பு?சிஎஸ்கே அணிக்கு இன்னும் 4 போட்டிகள் மீதம் இருப்பதால், ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுவிடலாம் என்று யோசித்து பார்க்க முடியாது.
இனி வரும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றால்கூட சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
எஞ்சியிருக்கும் 4 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி எதிர்காலத்துக்குத் தனது சிறந்த வீரர்கள் கலவையைப் பரிசீலிக்கலாம், இளம் வீரர்களுக்கான வாய்ப்பு, அவர்களின் திறமையைக் கண்டறியும் களமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கோட்டையில் வீழ்த்தப்பட்ட சிஎஸ்கேசென்னை சேப்பாக்கம் என்பது சிஎஸ்கே அணியின் கோட்டையாகக் கருதப்பட்டது. இதுவரை சேப்பாக்கத்தில் நடந்த 76 ஐபிஎல் போட்டிகளில் 51 ஆட்டங்களில் வென்று சிஎஸ்கே அணி தன்னை ராஜாவாக நிலைநிறுத்திக் கொண்டிருந்தது. கடந்த சீசனில் சேப்பாக்கத்தில் நடந்த 7 போட்டிகளில் 5 ஆட்டங்களில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.
ஆனால் இந்த சீசனின் முதல் போட்டியில் சிஎஸ்கே வெற்றியுடன் தொடங்கினாலும், அதன்பின் அடிக்கு மேல் அடி என சிஎஸ்கே அணியை மீண்டெழ விடாமல் விழுந்தது. ஆர்சிபி அணிக்கு எதிராக 17ஆண்டுகளில் முதல்முறையாக சென்னையில் சிஎஸ்கே தோற்றது.
கடந்த 15 ஆண்டுகளில் முதல்முறையாக டெல்லி கேபிடல்ஸ் அணியிடமும் சென்னையில் சிஎஸ்கே தோற்றது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் இதுவரை இல்லாத வகையில் மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.
சன்ரைசர்ஸ் அணி சென்னையில் சிஎஸ்கே அணிக்கு எதிராக இதற்கு முன் 5 முறை மோதியும் ஒரு ஆட்டத்தில்கூட வென்றதில்லை. முதல் முறையாக சிஎஸ்கே அணியை அதன் கோட்டையான சென்னையில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பெற்றது.
கடந்த 13 ஆண்டுகளில் முதல்முறையாக சென்னை சேப்பாக்கத்தில் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை சிஎஸ்கே சந்தித்துள்ளது.
சேப்பாக்கத்திலேயே சிஎஸ்கே தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தது ரசிகர்களுக்குப் பெரிய வருத்தத்தையும், ஆதங்கத்தையும் அளித்து வருகிறது. சிஎஸ்கே போட்டி என்றால் டிக்கெட் கிடைக்காத நிலை இருந்த காலத்தில், இப்போது சிஎஸ்கே போட்டிக்கு டிக்கெட் விற்பனை மந்தமாக இருக்கும் நிலை வந்துவிட்டது.
சிஎஸ்கே அணியின் படுமோசமான தோல்விகளுக்கு அணி வீரர்கள் தேர்வு, வீரர்களின் செயல்பாடு, பெரிய தொகை வீரர்களைத் தக்க வைப்பதில் தேக்கம், புதிய வீரர்களைத் தேர்ந்தெடுத்தும் வாய்ப்பு வழங்காதது, புதிதாக எதையும் பரிசோதிக்காதது எனப் பல அம்சங்கள் சொல்லப்படுகின்றன.
சிஎஸ்கே அணி இந்த சீசனில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆனால், இதுவரை தொடக்க ஆட்டக்காரர்களாக நிலையாக எந்த வீரரையும் களமிறக்கவில்லை. ரச்சின் ரவீந்திரா, கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், திரிபாதி, ரஷீத் எனப் பல வீரர்களை முயன்றும் கை கொடுக்கவில்லை.
அது மட்டுமின்றி தொடக்க ஜோடி குறைந்தபட்சம் பவர்ப்ளே ஓவர்கள் வரைகூட விக்கெட்டுகளை இழக்காமல் விளையாட வேண்டும். ஆனால், கடந்த 9 போட்டிகளில் 2 போட்டிகளைத் தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் பவர்ப்ளேவில் சிஎஸ்கே விக்கெட்டுகளை இழந்து, பவர்ப்ளே-ஐ சரியாகப் பயன்படுத்தத் தவறியுள்ளது.
வலுவில்லாத நடுவரிசைநடுவரிசைக்கென வீரர்களை ஏலத்தில் சிஎஸ்கே அணி தேர்வு செய்தாலும் அந்த வீரர்கள் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. குறிப்பாக தீபக் ஹூடா, சாம் கரன், விஜய் சங்கர், ஜடேஜா, ஷிவம் துபே என யாரும் நடுவரிசையில் எதிர்பார்த்த ஆட்டத்தை வழங்கவில்லை.
நடுப்பகுதி ஓவர்களில்தான் ஸ்கோரை உயர்த்த முடியும். ஆனால், சிஎஸ்கே அணி நடுப்பகுதி ஓவர்களில் படுமந்தமாக ஆடியது, ஷிவம் துபே என்ற பெரிய ஹிட்டரை நம்பி மட்டுமே நடுப்பகுதியில் சிஎஸ்கே சவாரி செய்தது.
ஆனால் ஷிவம் துபே பெரிய ஹிட்டர் என்றாலும், சிறந்த பேட்டர் என்று ஏற்க முடியாது. நின்ற இடத்தில் இருந்துதான் சிக்ஸர், பவுண்டரியை துபே அடிப்பாரே தவிர கால்களை நகர்த்தி, மைதானத்தின் நான்கு புறங்களிலும் ஷாட்களை அடிக்கும் வல்லமையான பேட்டர் இல்லை.
வெற்றிக்கான எண்ணம் இல்லைசிஎஸ்கே வீரர்கள் தன்னம்பிக்கையற்றுக் காணப்படுகிறார்கள். சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் நடக்கும் ஆட்டத்தில்கூட வெற்றிக்கான தருணம் எது என்பதைக் கண்டறிந்து அதைக் கைப்பற்றும் விழிப்புணர்வுகூட இல்லாமல் அணி வீரர்கள் இருப்பது கவலைக்குரியது.
பேட்டர்களின் ஷாட் தேர்வு இந்த சீசனில் மிகவும் மோசமாக இருந்தது. எந்தப் பந்தில் எந்த ஷாட்களை ஆட வேண்டும் என்ற தீர்க்கமான முடிவு இல்லாமல் களத்துக்கு வந்தவுடன் பெரிய ஷாட்டுக்கு முயன்று சிஎஸ்கே வீரர்கள் ஆட்டமிழப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
நடுப்பகுதி ஓவர்களில் பார்ட்னர்ஷிப்களை அமைப்பது வெற்றிக்குப் பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும். ஆனால், இந்த சீசனில் சிஎஸ்கே அணி ஆடிய 9 போட்டிகளில் ஒரு பார்ட்னர்ஷிப்கூட 100 ரன்களை கடக்கவில்லை.
சிஸ்கே அணி இந்த சீசனில் ஃபீல்டிங்கிலும் சரி, கேட்சுகளிலும் சரி கையில் வெண்ணையைத் தடவிக்கொண்டு செயல்படுவதுபோல் இருந்தது. கடந்த 8 போட்டிகளில் 27 கேட்சுகளை சிஎஸ்கே வீரர்கள் பிடித்துள்ளனர். 16 கேட்சுகளை தவறவிட்டுள்ளனர். 13 ரன்அவுட்களை தவறவிட்டுள்ளனர், 26 முறை ஃபீல்டிங்கை சரியாகச் செய்யாமல் கோட்டைவிட்டுள்ளனர்.
ஐபிஎல் அணிகளில் 9 அணிகளின் கேட்ச் திறன் குறைந்தபட்சம் 70 சதவிகிதத்திற்கு அதிகமாக இருக்கும் நிலையில் சிஎஸ்கே அணியின் கேட்ச் திறன் 62 சதவீதத்தைக்கூட தாண்டவில்லை.
சிஎஸ்கே அணியின் மோசமான தோல்விகளுக்கு மேற்கூறியவை காரணிகளாக இருந்தாலும், சரியான வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்திருந்தால் குறைந்தபட்சம் சொந்த மண்ணில் நடக்கும் போட்டிகளிலாவது வெற்றி பெற்றிருக்கலாம் என்றும் அணி விமர்சிக்கப்படுகிறது.
சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் "சிஎஸ்கே அணி ஏலத்தில் வீரர்களை எடுத்த முறையே தவறு. கடந்த காலத்தில் ஏலத்தின்போது சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி நேரடியாகப் பங்கேற்காவிட்டாலும் ஒவ்வொரு வீரர்கள் ஏலத்திலும் ஆலோசனை நடத்துவார். ஆனால், இந்த முறை ஏலத்தில் சரியான வீரர்களை எடுக்கவில்லை, ஒருபோதும் மோசமான ஏலத்தை தோனி ஏற்கமாட்டார்," என்று தெரிவித்தார்.
மேலும், "தோனிதான் கடைசி முடிவை எடுப்பார் என நிர்வாகிகள் கூறலாம். ஆனால் எனக்குத் தெரிந்தவரை தோனி ஏலத்தில் பங்கேற்றதில்லை. சில வீரர்கள் குறித்து தகவல்களை மட்டும் தோனி வழங்கியுள்ளார். ஆனால், தீவிரமாக ஏலத்தில் ஈடுபட்டதில்லை.
தோனிக்கு 43 வயதானாலும் தன்னால் அணிக்கு பங்களிப்பை வழங்க முடியும் எனத் தொடர்ந்து விளையாடுகிறார். ரூ.18 கோடி, ரூ.19 கோடி, ரூ.10 கோடி, ரூ.17 கோடி எனப் பல வீரர்களை அணி வாங்கியது, தக்கவைத்தது. ஆனால் அவர்கள் உச்சபங்களிப்பை வழங்கினார்களா?" என்றும் ரெய்னா கேள்வி எழுப்பியுள்ளார்.
சிஎஸ்கே சரியான வீரர்கள் கலவையைக் கண்டறிய கடந்த இரு போட்டிகளாக சோதனைகளை செய்யத் தொடங்கியுள்ளது. ஒரு நேரத்தில் நடுவரிசை பேட்டிங்கிற்கு தூண்களாக ரெய்னா, ராயுடு இருவரும் இருந்தனர்.
மெதுவாக ஆட்டத்தைத் தொடங்கினாலும் இருவரும் சரியான நேரத்தில் ஸ்கோரை உச்சத்துக்குக் கொண்டு செல்வர். ஆனால், இருவரும் அணியை விட்டு சென்ற பிறகு சிஎஸ்கே அணியில் இவர்கள் இடத்துக்கு எந்த பேட்டர்களையும் கொண்டு வரவில்லை.
சாம் கரனை 3வது வரிசையிலும், ஜடேஜாவை 4வது வரிசையிலும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி களமிறக்கியது. ஜடேஜாவை பொருத்தவரை 5,6,7வது இடத்தில்தான் 193 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார், 3வது வரிசையில் ஜடேஜா 3 முறை மட்டுமே களமிறங்கியுள்ளார். இப்படிப்பட்ட பேட்டரை எவ்வாறு 4வது வரிசையில் களமிறக்கலாம்.
டெவால்ட் பிரெவிஸ் என்னும் ஸ்பெசலிஷ்ட் பேட்டரை வைத்துக்கொண்டு சாம் கரனையும், ஜடேஜாவையும் களமிறக்கினார்கள்.
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன் ஃபார்மில் இல்லை. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் கைநழுவியதே சாம் கரன் வீசிய 2 ஓவர்களில்தான். அப்படியிருக்க சாம்கரன் பெரும்பாலும் 5வது 6வது வரிசையில் களமிறங்கியவர், அவரை 3வது வீரராகக் களமிறக்கி சிஎஸ்கே கையைச் சுட்டுக் கொண்டதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் விமர்சித்தனர்.
நடுவரிசைக்கென ஏலத்தில் எடுக்கப்பட்ட தீபக் ஹூடா 4 போட்டிகளில் 29 ரன்கள், ராகுல் திரிபாதி 5 போட்டிகளில் 55 ரன்கள், ஷிவம் துபே 242 ரன்கள் சேர்த்துள்ளனர். ஷிவம் துபே களமிறங்கிய பெரும்பாலான போட்டிகளில் கடும் அழுத்தம் இருந்ததால், அவரால் 150 ஸ்ட்ரைக் ரேட்டில்கூட விளையாட முடியவில்லை என்பது துரதிர்ஷ்டம்.
சிஎஸ்கே அணியின் தோல்விக்கான காரணம் குறித்த கேள்விக்கு மூத்த விளையாட்டு செய்தியாளர் ஆர் முத்துக்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், "சிஎஸ்கே அணி என்றால் தோனி, தோனி என்றால் சிஎஸ்கே என்ற பிராண்ட் கட்டமைக்கப்பட்டுள்ளது. முதலில் இந்தக் கட்டமைப்பு உடைக்கப்பட வேண்டும்" என்றார்.
மேலும், "43 வயதில் தோனி இன்னும் உடல்தகுதியுடன் இருக்கிறார் என்று சகவீரர்கள் கூறலாம். ஆனால், மனம் ஒத்துழைக்கும் அளவுக்கு உடல்நிலை ஒத்துழைக்காது. கடந்த சீசனோடு ஒப்பிடுகையில் இந்த சீசனில் தோனியால் பெரிதாக ஸ்கோர் செய்ய முடியவில்லை என்பதே இதற்குப் பதில்.
முதலில் 43 வயதாகும் தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்று புதிய தலைமையைக் கொண்டு வர வேண்டும். தோனி இன்னும் ஒரு சீசன் விளையாடுவார் என்று சொல்லி ஒரு இடத்தை சிஎஸ்கே வீணடிக்காமல், இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்."
சீனியர் வீரர்களைத் தக்கவைக்கிறேன் என்ற பெயரில் பெரிய தொகையை அதில் செலவிட்டு வருகின்றனர். குறிப்பாக ஜடேஜாவுக்கு ரூ.18 கோடி, அஸ்வின் ரூ.9 கோடி, துபே ரூ.12 கோடி, நூர் அகமது ரூ.10 கோடி செலவிட்டுள்ளனர். இவர்களை மாற்றிவிட்டு, புதிய வீரர்களை அடுத்து நடக்கும் ஏலத்தில் எடுக்க வேண்டும்.
இதைவிட முக்கியமானது தோனியை நீக்க வேண்டும். 43 வயதில் தோனி இனிமேல் என்ன பங்களிப்பு செய்வார் என எதிர்பார்க்கிறார்கள். தோனிக்கான இடத்தை இளம் வீரர் ஒருவருக்கு வழங்க வேண்டும். டி20 ஆட்டம் மாறிவிட்ட நிலையில், தோனியின் பழமையான ஆட்டம் இனிமேல் எடுபடாது. தோனியின் ஃபார்ம் முடிந்துவிட்டு என்ற உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள்.
கோலியைப் பாருங்கள் மாறிவரும் டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ப தன்னுடைய கேமை மாற்றிக்கொண்டார். ஆனால், தோனியால் தன்னுடைய கேம் பாணியை மாற்றமுடியவில்லை, அவரால் ரிஸ்க் எடுக்க முடிவதில்லை.
ஆகாஷ் சோப்ரா கூறியதைதான் இங்கு நினைவு கூற வேண்டும், தோனி இந்த டவுனில்தான் களமிறங்க வேண்டும், இங்குதான் விளையாட வேண்டும் என்று சொல்வதற்கு சிஎஸ்கே நிர்வாகத்தில் ஆட்கள் இல்லை, இதுதான் சிஎஸ்கே சரிவுக்கு பிரதான காரணம்" என்றார்.
சிஎஸ்கே அணி ஏலத்தில் சரியான வீரர்களே வாங்க முடியாததற்கு முக்கியக் காரணம் தக்கவைப்பில் பெரிய தொகையை இழந்ததுதான்.
பதிராணா (ரூ.13 கோடி), ஜடேஜா (ரூ.18 கோடி), கெய்க்வாட் (ரூ.18 கோடி) துபே (ரூ.12 கோடி), தோனி (ரூ.4 கோடி) ஏறக்குறைய ரூ.65 கோடி தக்கவைப்பிலேயே சிஎஸ்கே நிர்வாகம் செலவிட்டுள்ளது.
இது தவிர ஃபார்மில் இல்லாத அஸ்வினை ரூ.9.75 கோடிக்கும், நூர் அகமது-ஐ ரூ.10 கோடிக்கும் வாங்கியது. இதில் ரூ.20 கோடி வீணானது.
இது தவிர டேவான் கான்வே (ரூ.6.25 கோடி) ரச்சின் ரவீந்திரா (ரூ.4 கோடி). இந்த வீரர்களுக்கு செலவிட்ட தொகையை வைத்து அடுத்த சீசனுக்கான ஏலத்தில் அதிகமான இளம் வீரர்களை ஏலத்தில் வாங்கலாம்.
இது குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் பத்ரிநாத் அவரின் யூடியூப் சேனலில் பேசுகையில், "தக்கவைப்பில் உள்ள சீனியர் வீரர்களை தயக்கம் இல்லாமல் விடுவித்தாலே பெரிய தொகை சிஎஸ்கேவுக்கு கிடைக்கும். சிஎஸ்கே அணியில் அதிக விலைக்கு வாங்கிய வீரர்கள் பலரும் வெளியேதான் அமர்ந்துள்ளனர், ஏறக்குறைய ரூ.25 கோடி சும்மா கிடக்கிறது.
அஸ்வின், கான்வே, ரச்சின் ஆகியோரை சரியாகப் பயன்படுத்தவே இல்லை. சீனியர் வீரர்களை விடுவித்தாலே அந்தப் பணத்தில் அடுத்த சீசனுக்கான மினி ஏலத்தில் புதிய இளம் வீரர்களை அணிக்குள் கொண்டுவரலாம்.
அது மட்டுமல்லாமல் இந்திய அளவில் நடக்கும் பல்வேறு போட்டிகளுக்கு சிஎஸ்கே சார்பில் ஒரு பிரதிநிதியை அனுப்பி இளம் வீரர்களின் ஆட்டத்தை கவனிக்க வேண்டும். உலகளவில் நடக்கும் லீக் போட்டிகளிலும் இளம் வீரர்களை கண்காணித்து அவர்களை ஏலத்தின்போது வாங்க வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே செல்வது கடினம் என்பதால், அணியில் தற்போதுள்ள இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களில் யார் சிறப்பாக ஆடுகிறார்கள் என்பதைக் கண்டறிந்து அவர்களைத் தக்கவைக்க வேண்டும். ராமகிருஷ்ணா கோஷ், ஆந்த்ரே சித்தார்த், நாகர்கோட்டி, வன்ஸ் பேடி ஆகியோருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இதில் வன்ஸ் பேடி டெல்லி லீக்கில் சிறப்பாக பேட் செய்தவர் அவரை ஏன் இன்னும் பயன்படுத்வில்லை என்பது புரியவில்லை.
இதைவிட முக்கியமான அம்சம் தோனி இன்னும் ஒரு சீசனாவது குறைந்தபட்சம் விளையாடி அணியைக் கட்டமைத்து கேப்டனை உருவாக்கிவிட்டுச் செல்ல வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.