காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தின் போது ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது.
காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது பீகார் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இது பீகார் தேர்தலுக்கான ஒரு அவசர நிலைப்பாடாக இருந்தாலும் அந்த முடிவை அதனை நாங்கள் வரவேற்கிறோம்.
அடுத்து வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எத்தனை முனை போட்டிகள் காணப்பட்டாலும் இருமுனைப் போட்டிகள் என்பது தான் உண்மை. தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அதிமுக தன்னுடைய பலத்தை குறைத்து மதிப்பிடுகிறது. அதிமுக கட்சி தனித்து நின்றால் கூட அவர்களின் வாக்கு வலிமை என்பது குறையாது.
ஆனால் அதனை இங்கு அதிமுக உணராமல் இருக்கிறது என்பதுதான் உண்மை. எனவே எத்தனை அணிகள் இங்கு உருவானாலும் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தான் இரு துருவக் கூட்டணியாக முதன்மை வகிக்கும். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலிலும் இவர்களுக்குள் தான் போட்டி என்பது உருவாகும் என்றார்.