முன்னாள் மத்திய அமைச்சர் கிரிஜா வியாஸ் காலமானார். இவருக்கு வயது 79. காங்கிரஸ் மூத்த தலைவரான இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைபாடு காரணமாக குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானதை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள தனது வீட்டில் மார்ச் 31ம் தேதி பூஜையின் போது ஆரத்தி காட்டியதில் ஏற்பட்ட தீ விபத்தில் கிரிஜா வியாஸ் பலத்த தீக்காயமடைந்தார். அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கடுமையான தீக்காயங்களால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அவரின் சகோதரர் கோபால் சர்மா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் அனுபவமிக்க தலைவரான கிரிஜா வியாஸ், மாநில மற்றும் மத்திய அரசுகளில் முக்கிய பங்கு வகித்தவர்.
ராஜஸ்தானில் காங்கிரஸின் மாநிலத் தலைவராகவும், தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் பணிபுரிந்தவர். தனது அரசியல் வாழ்க்கை முழுவதும், காங்கிரஸில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ள கிரிஜா வியாஸ், 1991ம் ஆண்டு, உதய்பூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
நரசிம்மராவ் தலைமையிலான அரசில் மத்திய அமைச்சராக பணிபுரிந்த கிரிஜா வியாஸ், ராஜஸ்தானின் சித்தோர்கர் தொகுதியிலிருந்து 15-வது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கிரிஜா வியாஸின் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளனர்.