இந்தியாவில் 2010- 2011ம் ஆண்டில் கடைசியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2020-21-ல் கொரோனா பெருந்தொற்று காரணமாக அந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடியவில்லை. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணி கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன.
இதையடுத்து, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கடந்த 2 நாட்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்தது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மத்திய அரசின் முடிவு பற்றி விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.