தென்னாமெரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள சிலி மற்றும் அர்ஜென்டினாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இது ரிக்ட்ர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கம் மாகல்யானஸ் கடற்கரை பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 9.58 மணியளவில் கேப் ஹார்ன் மற்றும் அன்டார்டிகா இடையே கடலடியில் வெறும் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்துக்குப் பின்னர், சுனாமி அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டது. சிலியின் தேசிய பேரிடர் தடுப்பு மற்றும் மீட்பு சேவை (SENAPRED) மகால்யானஸ் பகுதிகளில் உள்ள கடற்கரைகளிலிருந்து மக்களை உடனடியாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.
சிலி ஜனாதிபதி காப்ரியல் போரிச், மக்கள் பாதுகாப்பாக 30 மீட்டர் உயரமுள்ள பாதுகாப்பான பகுதிக்குச் செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சுனாமி அலைகள் அன்டார்டிகா மற்றும் தெற்கு நகரங்களை எட்டக்கூடும் என Hydrographic and Oceanographic Service (SHOA) தெரிவித்துள்ளது. அர்ஜென்டினாவின் உஷுவாயா நகரிலும் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில் எந்த சேதமும் பதிவாகவில்லை. கடந்த 1960 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கங்களை நினைவூட்டும் இந்த நிலநடுக்கம், மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.