கூட்டத்தில் சிஐடியு சார்பில் மாவட்டத் தலைவர் இரா.பேச்சிமுத்து, மாவட்டச் செயலாளர் ஆர்.ரசல், மாவட்டத் துணைத்தலைவர் த.முனியசாமி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் லோகநாதன், மாவட்டப் பொருளாளர் ஏ.பாலசிங்கம், மாநகராட்சி கவுன்சிலர் தனலெட்சுமி, ஐஎன்டியுசி மாநில அமைப்பு செயலாளர் ராஜ், மதுரா கோஸ்ட் ஐஎன்டியுசி தலைவர் சுரேஷ்குமார். தொமுச மாவட்ட நிர்வாகிகள் முருகன், எம்.கருப்பசாமி, ஹெச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் துறைமுகம் சத்யா, மாவட்டத் தலைவர் ராஜ்குமார், ஏஐசிசிடியு மாவட்டத் தலைவர் மின்னல் அம்சத், மாவட்டச் செயலாளர் த.சிவராமன், மாநில செயற்குழு உறுப்பினர் றி.சகாயம், ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள், மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள மே 20 அகில இந்திய பொதுவேலைநிறுத்தத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றி பெறச் செய்வது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
மண்டல அளவிலான வேலைநிறுத்த தயாரிப்பு மாநாடுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் மே-3 அன்று மாவட்ட அளவிலான அனைத்து தொழிற்சங்க வேலைநிறுத்த ஆயத்த மாநாடு தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. வேலைநிறுத்தத்தின் நோக்கங்களையும், ஒன்றிய மோடி அரசு மக்களுக்கு இழைத்து வரும் அநீதிகளை தொழிலாளர்களிடமும், மக்களிடமும் எடுத்துச் செல்லும் வகையில் 1 லட்சம் துண்டு பிரசுரங்கள், 5000 போஸ்டர்கள் வெளியிடப்படும்.
மாவட்டம் முழுவதும் 100 க்கு மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்கள், இரண்டு நாட்கள் வாகனப் பிரச்சாரம், தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், கயத்தார், எட்டையபுரம், விளாத்திக்குளம், புதியம்புத்தூர், திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, உடன்குடி-சாத்தான்குளம் ஆகிய 10 வட்டாரங்களில் நடைபெறும். அனைத்து வட்டாரங்களிலும் தெருமுனைக் கூட்டங்கள், இருசக்கர வாகன மற்றும் சைக்கிள் பிரச்சாரம், நடைபயணம் ஆகிய வடிவங்களில் மக்கள் சந்திப்பு பயணங்கள் நடத்தப்படும்.
அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இன்று மே 3ம் தேதி காலை முதல் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டு வரப்படுகிறது.
ஆட்டோ-வேன் டாக்சி, உப்பளங்கள், வணிக நிறுவனங்கள், தீப்பெட்டி தொழிலகங்கள், மீன்பிடித்தல் உள்ளிட்ட துறைகளிலும் முழு வேலைநிறுத்தம் நடைபெறும். கடை-வணிக நிறுவனங்கள், ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள், லாரி வாகன உரிமையாளர்கள், உப்பள அதிபர்கள், தீப்பெட்டி ஆலை நிர்வாகத்தினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் ஆதரவும் கோரப்படும். விவசாயிகள், வாலிபர்கள், மாணவர்கள், பெண்கள் அமைப்பினரின் ஆதரவு திரட்டப்படும்.
அனைத்து தொழில் நிறுவனங்களிலும் வேலை நிறுத்தம் செய்வதுடன், தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய மூன்று மையங்களில் 5000 தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். தொழிலாளர்கள், விவசாயிகள் நலன்களை கார்பரேட் நிறுவனங்களுக்கு அடகு வைக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி மக்கள் நலனை பாதுகாக்க நடைபெறும் வேலைநிறுத்தம் வெற்றிபெற தூத்துக்குடி மாவட்ட மக்கள் பேராதரவு தரவேண்டும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.