பாஜக தேசிய தலைவர் ஜே .பி. நட்டா நேற்று நள்ளிரவு சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று சென்னையில், மாநில நிா்வாகிகளுடன் ஜே.பி. நட்டா முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜே.பி. நட்டாவை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார். வானதி சீனிவாசன், மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.
அதிமுக.-பாஜக கூட்டணி உருவானதைத் தொடா்ந்து கூட்டணியை விரிவாக்கம் செய்வது உள்ளிட்டவை குறித்து இன்று மாநில நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். பாஜகவினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வது தொடா்பாகவும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி வியூகம் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.