அதேநேரத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் இந்தியாவில் சைபர் தாக்குதல் நடத்த முயற்சித்து வருகின்றனர். அவற்றில் பெரும்பாலானவற்றை இந்தியா முறியடித்துள்ளது.
நகரோட்டா மற்றும் சுஞ்சுவானனில் உள்ள ராணுவ பள்ளி இணையதளத்தை முடக்கி அதில், பஹல்காமில் உயிரிழந்தவர்களின் அவமதிக்கும் வகையில் செய்தி வெளியிட முயற்சி நடந்துள்ளது. அதேபோல், முன்னாள் ராணுவத்தினருக்கான மருத்துவ சேவைக்கான இணையதளத்தையும் முடக்க பாகிஸ்தான் ஹேக்கர்கள் முயற்சித்துள்ளனர்.
குழந்தைகள், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் அப்பாவி மக்கள் தொடர்பான இணையதளங்களை பாகிஸ்தான் ஹேக்கர்கள் முடக்க முயற்சித்துள்ளனர்.முக்கியமான தேசிய நெட்வொர்க்குகள் அனைத்தும் ஊடுருவ முடியாதவை என அறிந்ததும், பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் கல்வி மற்றும் பொது மக்கள் நலன் சார்ந்த இணையதளங்களை குறிவைத்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள பல அடுக்கு சைபர் அடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பு, ஊடுருவல் முயற்சியை உரிய நேரத்தில் கண்டறிந்து பாகிஸ்தானில் எங்கிருந்து அந்த முயற்சி துவங்கியது என்பதை கண்டறிவதாக அதிகார்கள் கூறுகின்றனர்.
ஸ்ரீநகர் ராணுவ பள்ளி , ராணிகேட் ராணுவ பள்ளி இணையதளத்தில் ஹேக்கர்கள் பொய் தகவல்களை பதிவிட்டு உள்ளனர். ராணுவ நலன் வீட்டு வசதி அமைப்பு தகவல்களும் சமரசம் செய்யப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, அந்த இணையதளங்கள் முடக்கப்பட்டு தகவல்களை மறுசீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.