மதுரை மாவட்டம் சாமந்தம் அருகிலுள்ள விராதனூரைச் சேர்ந்தவர் கணேசன். இவர் சோழவந்தானில் தள்ளுவண்டியில் சுண்டல் வியாபாரம் செய்தார். கடந்த 2019-ல் திடீரென இறந்துவிட்டார். 6 ஆண்டுக்குப் பிறகு கணேசனின் மனைவி முருகேசுவரி, வாரிசுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். இம்மனுவை விராதனூர் விஏஓ இந்திரா(45) தள்ளுபடி செய்தார்.
தொடர்ந்து 2வது முறையாக வாரிசுச் சான்றிதழுக்கு விண்ணப்பித்த நிலையில் மனுவை விஏஓ ஏற்றுக் கொண்டார். ஆனால், காலதாமதத்தைக் காரணம் காட்டி ஓராண்டு ரூ. 3,000 வீதம் 6 ஆண்டுக்கு ரூ.18,000 லஞ்சம் கேட்டுள்ளார். இந்த பணத்தை தாசில்தார் நகரிலுள்ள தனது வீட்டில் வந்து கொடுக்குமாறு விஏஓ கூறியுள்ளார்.
காலதாமதத்தை காரணம் காட்டி சான்றிதழ் வழங்க பணம் வசூலிக்கப்படுவது பல இடங்களில் தொடர்கிறது. இதற்காக பணம் வாங்கவோ, சான்றிதழ் தர மறுக்கவோ கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகேசுவரி மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி விஏஓவுக்கு பணம் கொடுக்க முருகேசுவரி பேசியுள்ளார்.
அவர் அண்ணா நகரிலுள்ள ஒரு திரையரங்கு அருகில் வரும்படி கூறியுள்ளார். அங்கு சென்று முருகேசுவரி ரூ. 18 ஆயிரத்தை விஏஓவிடம் கொடுத்தார். அருகில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு கூடுதல் டிஎஸ்பி சத்யசீலன், ஆய்வாளர் குமரகுரு ஆகியோர் கையும், களவுமாகப் பிடித்து விஏஓ இந்திராவை கைது செய்தனர்.