அடுத்தடுத்து செக் வைக்கும் இந்தியா!
Newstm Tamil May 04, 2025 01:48 PM

இந்தியாவுடனான போரைப் பாகிஸ்தான் தொடங்கியது. அதனால், இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் முறையாகவும் முழுமையாகவும் வளர்ச்சியடையவில்லை.

இந்தியா, பாகிஸ்தான் இருதரப்பு வர்த்தகம் மிகக் மிகக் குறைவாகவே உள்ளது. மொத்த வர்த்தகத்தில் 0.06 சதவீதம் மட்டுமே பாகிஸ்தானுடனான இந்திய வர்த்தகம் ஆகும்.  இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மிகக் குறைவாகவே இருந்தாலும், பல பில்லியன் டாலர் மதிப்புடைய மறைமுக வர்த்தகம் தொடர்ந்து நடைபெறுகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

1996ம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு  ‘மிகவும் விரும்பத்தக்க நாடு’ என்ற வர்த்தக அந்தஸ்தை இந்தியா கொடுத்தது. இந்த மூலம், தடையற்ற வர்த்தகம், குறைந்த இறக்குமதி வரி ஆகிய சலுகைகளைப் பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கியது.

பாம்புக்குப் பால் வார்த்த கதையாக, 2019ம் ஆண்டு புல்வாமா பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. அதனைத் தொடர்ந்து, ‘மிகவும் விரும்பத்தக்க நாடு’ என்ற வர்த்தக அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. மேலும், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவீத  வரி விதித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

பழங்கள், உலர்ந்த பழங்கள்  டைசோடியம் கார்பனேட், பெட்ரோலியப்பொருட்கள், உரங்கள், அலுமினியம், ஜிப்ஸம, சிமெண்ட்,விலங்குகளின் தோல் பொருட்கள், ரசாயனப் பொருட்கள், கச்சா பருத்தி மற்றும் பருத்தி ஆடைகள், கண்ணாடிப் பொருட்கள் போன்றவை பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்தியாவுக்கும்  பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தகம் சமீபத்திய ஆண்டுகளில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. 2024 ஏப்ரல் முதல் 2025 ஜனவரி வரை, பாகிஸ்தானிலிருந்து வெறும் 4, 20,000 டாலர் மதிப்பிலான பொருட்களை மட்டுமே  இந்தியா  இறக்குமதி செய்துள்ளது.

இந்தச் சுழலில், காஷ்மீரில் பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் இந்து என்ற காரணத்துக்காகப் பயங்கரவாதிகளால் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப் பட்டனர். அதன்பின் பாகிஸ்தான் மீது ஒன்றன் பின் ஒன்றாக  பல  நடவடிக்கைகளை இந்தியா எடுத்துவருகிறது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அடியாகச் சிந்து நதி நீர் நிறுத்தம் ,அட்டாரி எல்லை மூடல், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், தூதரக உறவுகள் துண்டிப்பு,  ஏற்றுமதிக்குத் தடை, இந்திய வான்வெளி மற்றும்  கடல்வெளியைப் பயன்படுத்தத் தடை, பாகிஸ்தான் செய்தி ஊடகங்களுக்குத் தடை, பாகிஸ்தானின் பிரதமர் உட்படப் பல முக்கிய பாகிஸ்தான் பிரபலங்களின் சமூக ஊடகக் கணக்குகள் முடக்கம் என்று பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், இந்திய அரசின்  வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, 2023 என்ற சட்டத்தில், ஒரு புதிய கொள்கை   இணைக்கப் பட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தானில் இருந்து உற்பத்தியாகும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் நேரடி அல்லது மறைமுக இறக்குமதி உடனடியாக தடை செய்யப்படுகிறது என்று அறிவிக்கப் பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

பகல்காம் பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாகப் பாகிஸ்தானின் தேசிய பங்குச் சந்தை 8000 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.  இந்நிலையில், பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யவும் இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ஒரு கிலோ சிக்கன் 798 ரூபாய்க்கும்  ஒரு கிலோ அரிசி 340 ரூபாய்க்கும்   ஒரு டஜன் முட்டை  332 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பால் 224 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சுமார் பத்து மில்லியன் மக்கள் ஒரு வேளை உணவுக் கூட  கிடைக்காமல் தவித்து வருவதாகச் சர்வதேச அறிக்கை  தெரிவித்துள்ளது.

25 சதவீத பணவீக்கத்துடன்  பல்வேறு பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் பாகிஸ்தான் இந்தியாவுடன் போருக்கு நிற்பது அழிவுக்கே என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.