உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரில், ஒரு ரஷ்ய சிப்பாய் எதிரியின் டிரோனை தவறாகக் கையாண்ட போது, அது வெடித்ததால் உயிரிழந்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகிய வீடியோவில், சிப்பாய் ஒருவர் தன் பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்தவுடன் தரையில் விழுந்திருந்த ஒரு வெள்ளை டிரோனை எடுத்து உள்ளே செல்வதும், பிறகு பதுங்கு குழிக்குள் பயங்கர வெடிப்பு நிகழ்வதும் தெளிவாகக் காணப்படுகிறது.
இந்த வீடியோ உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. பதுங்கு குழி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. சம்பவ இடம் மற்றும் நேரம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. ரஷ்ய சிப்பாய், கட்டுப்பாடு இழந்த டிரோனை ஆய்வு செய்ய நம்பிக்கையுடன் எடுத்திருக்கலாம்.
ஆனால் அது காமிகேஸ் டிரோனாக இருந்ததால், பதுங்கு குழிக்குள் சென்று சில விநாடிகளில் வெடித்து விட்டது. இந்த சம்பவம், டிரோன் தாக்குதல்கள் தற்போது யுத்தப் பகுதியில் எவ்வளவு சக்திவாய்ந்த ஆயுதமாக மாறியுள்ளன என்பதற்கான இன்னொரு எடுத்துக்காட்டு.
FPV (First Person View) டிரோன்கள், நேரடி வீடியோ ஒளிபரப்புடன் எதிரியின் சிப்பாய்கள் மற்றும் வாகனங்களை குறிவைத்து தாக்குவதற்காக இருநாடுகளும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன. டிரோன்கள் மூலம் எடுக்கப்படும் வீடியோக்கள், தாக்குதலின் இறுதி காட்சியாக வெடிப்புடன் முடிவடைகின்றன.