திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சேர்வக்காரன்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் 42 வயது நாகராஜ். இவர் திருப்பூர் பஞ்சம்பாளையம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஆனந்தி(38). மகள் தீட்சனா (13) தாராபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி, மகள் மூவரும் ஆன்மீக பயணமாக திருச்செந்தூர், திருநள்ளாறு, கோவில்களுக்கு சென்று விட்டு அதிகாலை 3மணி அளவில் தாராபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்களது இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
தாராபுரம்-காங்கேயம் சாலை குள்ளாய்பாளையம் மாந்தோப்பின் அருகே சாலையின் மத்தியில் பாலம் கட்டுவதற்காக மூன்று ஆழமான குழிகள் தோண்டப்பட்டு தகுந்த சாலை பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. இந்நிலையில் அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த நாகராஜ் சாலையில் வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக வாகனத்தை ஒதுக்கிய போது பாலம் கட்ட தோண்டப்பட்ட ஆழமான குழிக்குள் வாகனத்துடன் 3 பேரும் விழுந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே நாகராஜ் மற்றும் அவரது மனைவி ஆனந்தி இருவரும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியாகினர். மகள் தீட்சனா பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இந்நிலையில், “காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்” என விடிய விடிய சத்தமிட்டு கொண்டிருந்தார். மாணவி மற்றும் இவர்களது பெற்றோர் குழிக்குள் கிடந்ததால் சாலையில் வாகனத்தில் சென்ற யாருக்கும் இவர்களது நிலை தெரியவில்லை.
இன்று அதிகாலை கல்லூரி மாணவர்கள் குழு சுற்றுலா சென்று விட்டு திரும்பி வரும் இப்போது பாலத்திற்காக தோண்டப்பட்ட குழிக்குள் இருந்து அபய குரல் கேட்டது. உடனடியாக தங்கள் வாகனத்தை நிறுத்தி சென்று பார்த்தனர். போது நிலைமையை உணர்ந்து உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து விபத்தில் உயிரிழந்த கணவன, மனைவி உடலையும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கால் எலும்பு முறிவடைந்த மாணவியை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.