உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்த குல்ஷானா ரியாஸ் கான் (21) என்ற பெண், “லூட்டேரி துல்ஹான்” என்ற பெயரில் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதாவது குஜராத்தில் காஜல், ஹரியானாவில் சீமா, பீகாரில் நேஹா என பெயரை மாற்றி, பல்வேறு ஆட்களை திருமணம் செய்வது போல நடித்து ஏமாற்றியுள்ளார். இவர், பல குடும்பங்களை ஆன்லைன் வழியாக நம்ப வைத்துத் திருமணம் செய்து, நகை, பணம் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களுடன் திருமண நாளில் அல்லது மறுநாள் திருடிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இந்த மோசடியின் பின்னணியில் ஒரு பெரிய கும்பல் செயல்பட்டுள்ளது. இதில் 5 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் இருந்தனர். ஒருவர் மணப்பெண் வேடத்தில் இருந்தால், மற்றவர்கள் உறவினர்களாக நடிப்பார்கள் . அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.72,000 ரொக்கம், ஒரு மோட்டார் சைக்கிள், 11 மொபைல் போன்கள், ஒரு தங்க மங்களசூத்திரம் மற்றும் 3 போலி ஆதார் அட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இறுதியாக அவர்கள் ஹரியானாவைச் சேர்ந்த சோனு என்பவரை ஏமாற்றியுள்ளனர். அவர் திருமண ஏற்பாடுகளுக்காக ரூ.80,000 கொடுத்த நிலையில் திருமண நாளிலேயே மணப்பெண் காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாருக்கு புகார் அளித்தார். அதன்பேரில் நடந்த விசாரணையில், குல்ஷானா மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் 12க்கும் மேற்பட்ட மோசடி திருமணங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. மேலும் இதில் குல்சானாவுக்கு 21 வயது ஆகும் நிலையில் அதற்குள் 12 திருமணங்களை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.