ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அந்த வகையில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களை வெளியேற்றுதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. நேற்று பாக்கிஸ்தானில் இருந்து வரும் பொருள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது.
பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு தபால் சேவையும் ரத்து செய்யப்பட்டது. தற்போது இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் இருதரப்பில் ஏற்படும் பாதிப்புகளை மத்திய அரசு சந்திக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இரு நாடுகளிலும் குழந்தைகள் பெண்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். போருக்கு பதில் தீவிரவாதிகளில் இருப்பிடத்தை தாக்கலாம் என கூறியுள்ளார்.