இன்றைய (04/05/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சி, வாட்ஸ்ஆப் மூலம் பொதுமக்களுக்கான சேவைகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அதில் "மக்களுக்கு விரைவான மற்றும் எளிமையான உதவிகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டம், மாநகராட்சி தங்கள் புகார்களை முன்பை விட சிறப்பாகவும் விரைவாகவும் கையாள்வதற்கு வழிவகுக்கும். இந்த வாட்ஸ்ஆப் வசதி மூலம், மக்கள் வரி செலுத்தலாம் மற்றும் ஆவணங்களை பதிவிறக்கம் செய்யலாம்", என்றும் கூறப்பட்டுள்ளது.
"நாங்கள் ஒரு பொதுவான சென்னை மாநகராட்சி வாட்ஸ்ஆப் எண்ணை வழங்குவோம், இது பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள உதவுகிறது. இந்த சாட்பாட் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும்", என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் கூறினார் என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா அதன் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
உதாரணமாக, பிறப்புச் சான்றிதழ் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டவுடன் பயனரின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்பப்படும். இந்த வாட்ஸ்ஆப் அம்சம் மூலம் மக்கள், பிறப்பு/இறப்புச் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யலாம், சொத்து வரி செலுத்தலாம், புகார்களைப் பதிவு செய்யலாம். தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் சென்னை மாநகராட்சியின் அறிவிப்புகளை நிகழ்நேரத்தில் பெறவும் முடியும் என்று அதிகாரிகள் கூறியதாக அந்த செய்தி தெரிவிக்கின்றது.
"இது அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். சரியான நேரத்தில் வரி செலுத்துவதையும் ஊக்குவிக்கிறது. இது வசதியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த வரி வசூல் விகிதங்களையும் மேம்படுத்துகிறது", என்று ஆணையர் குமரகுருபரன் கூறியதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
''செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வாட்ஸ்ஆப் சாட்பாட்டின் மேம்பாடு மற்றும் பராமரிப்பு வெளி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்படும், மேலும் இந்த அமைப்பு இரண்டு மாதங்களுக்குள் செயல்படுத்தப்படும்", என்றும் ஆணையர் கூறியதாக அந்த செய்தி கூறுகின்றது.
"இந்தியாவுக்கு என்றைக்கும் தமிழ்நாடு முன்மாதிரியாக இருக்கும். நமது உரிமையை எந்த காலத்திலும் விட்டு தரமாட்டோம்" என்று கல்வியாளர்கள் நடத்திய பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார் என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சரே நியமிக்கலாம் என்ற அதிகாரத்தை சட்ட நடவடிக்கைகள் மூலம் பெற்று தந்ததற்காக தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை மற்றும் கல்வியாளர்கள் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது", என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "பொதுவாக யாரும் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று சொன்னால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். நேரம் தர மாட்டேன். ஆனாலும் இந்த விழாவுக்கு நான் சரி என்று சொன்னதற்கு காரணம், உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புதான். இது தனிப்பட்ட ஸ்டாலினுக்காக அல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்திருக்கும் வெற்றி. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும், மக்களுக்கும் உச்ச நீதிமன்றம் மூலம் தமிழ்நாடு பெற்று தந்துள்ள வெற்றி என்று ஸ்டாலின் பேசினார்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.
"முதலமைச்சர் ஆகி மக்களுக்கு தேவையான திட்டங்களை திட்டினால், மத்திய அரசின் ஏஜென்டாக நியமிக்கப்பட்டு தற்காலிகமாக இங்கே தங்கி இருக்கக்கூடிய ஒரு கவர்னர் இதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியும் என்றால், மக்கள் அளிக்கும் ஓட்டுக்கு என்ன மரியாதை?எதற்கு தேர்தலை நடத்த வேண்டும்? கவர்னர் பதவி என்பது எந்த பயனும் இல்லாத 'ரப்பர் ஸ்டாம்ப் போஸ்ட் என்று ஸ்டாலின் கூறினார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கேரள மருத்துவமனையில் தீ விபத்து, 4 பேர் பலிகடந்த வெள்ளிக்கிழமை (மே 2) அன்று இரவு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் புகை சூழ்ந்ததால் வெளியேற்றப்பட்ட நான்கு நோயாளிகள் உயிரிழந்தனர். அவர்கள் புகையை சுவாசித்ததால் மரணமடையவில்லை என்று முதற்கட்ட பிரேத பரிசோதனை முடிவுகள் தெரிவித்தபோதிலும், அவர்களது இறப்பு, தொடர்ந்து கேள்விகளை எழுப்பியுள்ளன என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த செய்தியில், "வென்டிலேட்டரில் இருந்த இந்த 4 நோயாளிகள் வெளியேற்றப்பட்டபோது இறந்ததாக அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டிவரும் நேரத்தில் சனிக்கிழமை (மே 3) சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், கோழிக்கோடு மருத்துவமனை அல்லாமல் வேறு மருத்துவ நிபுணர்கள் குழு இந்த விஷயம் குறித்து விசாரிக்க நியமிக்கப்படும் என கூறினார்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"கோபாலன் (65), சுரேந்திரன் (59), கங்காதரன் (70) ஆகியோரின் பிரேத பரிசோதனையில், அவர்கள் மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது. நசீராவின் (44) முதற்கட்ட பிரேத பரிசோதனை முடிவுகளின்படி, அவர் விஷம் அருந்தியதன் காரணமாக உயிரிழந்தார் என்பது தெரியவந்தது.
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி, ரூ.10 லட்சம் மதிப்பிலான வலை, ஜிபிஎஸ் கருவி, மீன்கள் போன்றவற்றை பறித்துச் சென்றனர். இதில், 20 மீனவர்கள் காயமடைந்தனர் என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
"நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு சொந்தமான படகில், ஆனந்த் மற்றும் முரளி, சாமிநாதன், வெற்றிவேல், அன்பரசன் ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று முன்தினம் இரவு கோடியக் கரைக்கு தென்கிழக்கே மீன் இந்த 5 தாக்குதல் சம்பவங்களின்களின் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர் அதிவேக படகில் வந்து கத்திமுனையில் தாக்குதல் நடத்தி, வலை, ஜிபிஎஸ் கருவி, மீன்கள் உள்ளிட்டவற்றை கொள்ளை அடித்துச் சென்றனர்", என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதில், "இதே போல, செருதூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுமதி, மாணிக்கவேல், ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த துர்காதேவி ஆகியோருக்கு சொந் தமான படகுகளில் மீன்பிடித்த 19 மீனவர்கள் மீது, அடுத்தடுத்து இலங்கை கடற்கொள்ளையர் கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி, பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த 5 தாக்குதல் சம்பவங்களிலும் பலத்த காயமடைந்த 20க்கும் மேற்பட்ட மீனவர்களை நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்", என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.