மத்திய அரசு சமீபத்தில் NCERT பாட புத்தகங்களில் இருந்து முகலாயப் பேரரசர்கள் குறித்த வரலாறை நீக்கிவிட்டதாக ஒரு செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக தற்போது நடிகர் மாதவன் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, ஆங்கிலேயர்களும் முகலாயர்களும் சுமார் 800 வருடங்கள் மட்டுமே நம்மை ஆட்சி செய்தனர்.
ஆனால் சோழப் பேரரசு என்பது 2400 வருடங்கள் பழமையானது. நான் பள்ளியில் படித்த போது பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி நான்கு பாடங்கள் இருந்தது. ஆனால் சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் குறித்து ஒரே ஒரு பாடம் மட்டும் தான் இருந்தது. இந்த பாடத்திட்டத்தை தீர்மானித்தது யார்.?
தென்னிந்திய அரசர்களான சோழர்கள் குறித்து பாட புத்தகத்தில் விரிவாக கொடுக்காதது ஏன்.? தற்போது பாட புத்தகத்திலிருந்து முகலாயர்கள் வரலாற்றை நீக்கிவிட்டு கும்பமேளா பற்றி சேர்த்துள்ளதாக கூறுகிறீர்கள். மேலும் நம்முடைய வரலாற்றை பாட புத்தகத்தில் சேர்ப்பதில் என்ன பிரச்சனை அதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பினார்.