#featured_image %name%
ஐ.பி.எல் 2025 – பெங்களூரு vs சென்னை – சின்னசாமி மைதானம் பெங்களூரு – 03.05.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (213/5, விராட் கோலி 62, ஜேக்கப் பெதல் 55, ரொமாரியோ ஷெப்பர்ட் ஆட்டமிழக்காமல் 53, மஹீஷா பதிரனா 3/36, சாம் கரன் 1/34, நூர் அகமது 1/26) சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை (213/5, ஆயுஷ் மெஹத்ரே 94, ரவீந்த்ர ஜதேஜா 77, லுங்கி நெகிடி 3/30, யஷ் தயாள் 1/41, க்ருணால் பாண்ட்யா 1/24) 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜேக்கம் பெதல் (33 பந்துகளில் 55 ரன், 8 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் விராட் கோலி (33 பந்துகளில் 62 ரன், 5 ஃபோர், 5 சிக்சர்) இருவரும் மிகச் சிறப்பாக விளையாடினர்.
முதல் விக்கட்டுக்கு இருவரும் 97 ரன்கள் சேர்த்தனர். அவர்களுக்குப் பின்னால் வந்த தேவதத் படிக்கல் (15 பந்துகளில் 17 ரன்), ரஜத் படிதர் (15 பந்துகளில் 11 ரன்), ஜிதேஷ் ஷர்மா (8 பந்துகளில் 7 ரன்) ஆகியோர் இன்று அதிரடியாக ஆடமுடியவில்லை. 17ஆவது ஓவர் ஐந்தாவது பந்தில் ஜிதேஷ் ஆட்டமிழக்க டிம் டேவிட் (2 ரன்) ஆட வந்தார்.
18ஆவது ஓவர் நாலாவது பந்தில் ரஜத் படிதர் ஆட்டமிழக்க ரொமாரியோ ஷெப்பர்ட் (14 பந்துகளில் 53 ரன், 4 ஃபோர், 6 சிக்சர்) ஆட வந்தார். அதன் பின்னர் நடந்தது வரலாறு. 19ஆவது ஓவரில் ஷெப்பர்ட் 6, 6, 4, 6, 7nb, 0, 4 என 33 ரன்கள் அடித்தார். பந்து வீசியவர் கலீல் அகமது. இதன் மூலம் ஐபிஎல் ஆட்டங்களில் ஒரு ஓவரில் அதிக ரன் கொடுத்த பந்துவீச்சாளர் ஆனார்.
அடுத்த ஓவரில் 1, 4, 0, 4, 6, 6 என 21 ரன்கள் அடிக்கப்பட்டது. இரண்டு ஓவர்களிலும் சேர்த்து 54 ரன்கள் இந்த 54 ரன் கள் இல்லையென்றால் பெங்களூரு அணி 159 முதல் 170 ரன் வரை அடித்திருக்கும். ரொமாரியோ ஷெப்பர்ட் அதிக வேக அரைச்சதத்திற்குச் சொந்தக்காரர் ஆனார்.
214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர் ஆயுஷ் மஹத்ரே (48 பந்துகளில் 94 ரன், 9 ஃபோர், 5 சிக்சர்) சிறப்பாக ஆடி அடித்தளம் அமைத்தார். மற்றொரு தொடக்க வீரரான ஷேக் ரஷீத் (11 பந்துகளில் 14 ரன்) மற்றும் மூன்றாவதாகக் களமிறங்கிய சாம் கரண் (5 ரன்) இருவரும் இன்று சோபிக்கவில்லை.
ஆனால் நாலாவதாகக் களமிறங்கிய ரவீந்தர் ஜதேஜா (45 பந்துகளில் 77 ரன், 8 ஃபோர், 2 சிக்சர்) நன்றாக விளையாடி அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டுவந்தார்.
ஆயுஷ் மஹத்ரே 17ஆவது ஓவர், இரண்டாவது பந்தில் ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் டிவால்ட் ப்ருயிஸ் ஆட்டமிழந்தார். அப்போது தோனி (12 ரன்) விளையாட வந்தார். அந்நிலையில் வெற்றிக்கு 42 ரன்கள் தேவைப்பட்டன. ஜதேஜா, தோனி இருவரும் வெற்றியை எப்படியும் பெற்றுத்தந்துவிடுவார்கள் என எண்ணி இருந்த நிலையில் 18ஆவது ஓவரில் சுயேஷ் ஷர்மா 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
அடுத்த ஓவரில் கோலி ஒரு மிக எளிதான கேட்சை விட்டுவிட்டார், இதனால் ஜதேஜாவுக்கு 4 ரன் கிடைத்தது. 19ஆவது ஓவரை புவனேஷ் குமார் வீசினார். தோனி ஒரு சிக்சரும், ஜதேஜா ஒரு ஃபோரும் அடித்ததால் அந்த ஓவரில் 14 ரன்கள் வந்தன.
கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில் யஷ் தயாள் பந்துவீச வந்தார். அந்த ஓவரில் மூன்றாவது பந்தில் தோனி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்த பால் நோபாலாக வீசப்பட்டது; அந்த பந்தில் ஷவம் துபே (8 ரன்) ஒரு சிக்சர் அடித்தார்.
இதனால் அடுத்த மூன்று பந்துகளில் 6 ரன் அடித்தால் வெற்றி என்ற நிலை. ஆனால் 76 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த ஜதேஜாவும் அதிரடி வீரர் ஷிவம் துபேயும் மூன்று சிங்கிள் மட்டும் ஓடியதால் சென்னை அணி தோல்வியைத் தழுவியது.
ஆட்டநாயகனாக ரொமாரியோ ஷெப்பர்ட் அறிவிக்கப்பட்டார். பெங்களூரு அணி 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
ஒரு ஜோக்
கணவன் -என் மூக்குக் கண்ணாடியை எங்கே காணோம்? மனைவி – CSK கணவன் – என்ன சொல்ற? மனைவி – CSK அப்படீன்னா தெரியலையா? Bottom of the table. |
News First Appeared in