மத்திய பிரதேச மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பிரகாஷ் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதிகாலை 5 மணிக்கு காட்டுப்பகுதியில் உள்ள தனது பண்ணைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புதரில் பதுங்கி இருந்த புலி ஒன்று தீடிரென பிரகாஷ் மீது பாய்ந்தது. புலி பயங்கரமாக தாக்கியதில் பிரகாஷ் வலியில் அலறி துடித்தார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த கிராம மக்கள் அங்கிருந்து புலியை விரட்டினர்.
மக்கள் கூட்டத்தை பார்த்ததும் புலி அங்கிருந்து தப்பி ஓடியது. ஆனால் புலி பயங்கரமாக தாக்கியதில் படுகாயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து 2 மாதங்களுக்கு முன்பாகவே அந்தப் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். அதன் பின் பிரகாஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.