பகீர்... எயிட்ஸ் நோய் இருந்ததை மறைத்து திருமணம்.. இளம்பெண் கணவர் மீது வழக்கு!
Dinamaalai May 05, 2025 04:48 AM

திருவாரூர் மாவட்டத்தில், எச்ஐவி தொற்று இருந்ததை மறைத்து, திருமணம் செய்து மோசடி செய்த கணவரால், தனக்கும் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, இளம்பெண் ஒருவர் அளித்த புகாரில் கணவர் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும், மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவருக்கும் 21.8.2020 அன்று பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களில் அந்த பெண் கர்ப்பமடைந்தார்.

அப்போது அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, அவரது கணவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கும் எச்ஐவி தொற்று இருப்பது தெரியவந்தது.

இதில் சந்தேகமடைந்த அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் விசாரித்ததில், திருமணத்துக்கு முன்பே அவரது கணவருக்கு எச்ஐவி தொற்று இருந்தது தெரிய வந்துள்ளது.

இதனிடையே அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. முன்கூட்டியே எச்ஐவி பரிசோதனை செய்து உரிய மருந்து மாத்திரைகளை அந்த பெண் சாப்பிட்டதால் பிறந்த குழந்தைக்கு எச்ஐவி தொற்று இல்லை.

இந்நிலையில் தனக்கு எச்ஐவி தொற்று உள்ளதை மறைத்து திருமணம் செய்து மோசடி செய்ததாக கணவர் மற்றும் அவரது உறவினர்கள் 4 பேர் உட்பட 5 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி, மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏப்.10ம் தேதி அந்த பெண் அளித்த புகாரின்பேரில் விசாரணை செய்த போலீஸார், பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் 4 பேர் என 5 பேர் மீது, 4 பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, பெண்ணின் கணவர் உட்பட 5 பேரும் தலைமறைவாகியுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.