ஸ்கூட்டர் மீது வாகனம் மோதி விபத்து... பள்ளி தலைமையாசிரியர் உயிரிழப்பு!
Dinamaalai May 05, 2025 04:48 AM

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து  சங்கர் நகர் மேம்பாலத்தில் ஸ்கூட்டர் மீது வாகனம் மோதி விபத்திற்குள்ளானதில் பள்ளி தலைமை ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். 

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே பள்ளமடை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன். இவரது வீடு சிவன் கோவில் மேலரத வீதியில் உள்ளது. தினமும் பள்ளிக்கு காரில் சென்று வந்த நிலையில், தற்போது விடுமுறையில் இருந்தார். 

இந்நிலையில் நேற்று பள்ளியில் ஒரு மாணவன் புதிதாக சேர்ந்ததால், அந்த ஒரு மாணவன் சேர்க்கைக்காக தலைமை ஆசிரியர் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றார். 

பின்னர் மதியம் வீடு திரும்பினார்.  தாழையூத்து சங்கர் நகர் மேம்பாலத்தில் வந்துக் கொண்டிருந்தத போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு உடல் நசுங்கியது. சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் அணிந்திருந்த ஹெல்மெட் அவரது தலையிலேயே இருந்தது. தாழையூத்து போலீசார் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவர்கள் நலனில் எப்போதும் அக்கறை கொண்ட தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் அடுத்த ஆண்டு ஓய்வு பெற இருந்தார். பள்ளியில் பணியில் இருந்த ஆசிரியர்கள் ஒரு மாணவன் சேர்க்கையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் வரவேண்டாம் என கூறிய போதும்கூட அவர் டூவீலரில் பள்ளிக்கு சென்று திரும்பியபோது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.