பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியது. இதனால், பாகிஸ்தானுக்கு வரும் தண்ணீரை இந்தியா மடைமாற்றி விடக்கூடும் என்ற அச்சம் அந்நாட்டிற்கு அதிகரித்தது.
இந்த நிலையில், ஜம்முவின் ராம்பன் பகுதியில் செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் அணையின் மதகுகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதாக செய்திகளும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்ட பிறகு முதல் முறையாக, அந்த ஒப்பந்தத்தில் உள்ள நதி ஒன்றில் அமைந்துள்ள அணையின் மதகுகளை இந்தியா மூடியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
வடக்கு காஷ்மீரில் ஜீலம் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிஷன்கங்கா அணையின் மதகுகளையும் மூட இந்தியா திட்டமிட்டுள்ளதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
பாக்லிஹார், கிஷன் கங்கா ஆகிய நீர்மின் அணைகளின் நீர் வெளியேற்ற நேரத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் இந்தியாவிடம் இருப்பதாக, இந்த விஷயம் தொடர்பாகத் தகவலறிந்த வட்டாரத்தில் ஒருவர் கூறியதாக பிடிஐ தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு வரும் நீரின் திசையைத் தடுக்கவோ அல்லது மாற்றவோ இந்தியா முயன்றால், அது போருக்கான அறைகூவலாகக் கருதப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அண்மையில் கூறியிருந்த நிலையில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
'போர் என்பது பீரங்கி குண்டுகள் அல்லது துப்பாக்கிகளைக் கொண்டு சுடுவது மட்டுமல்ல, போர் தொடுக்கப் பல வழிகள் உள்ளன. இது அவற்றில் ஒன்று' என்று கவாஜா ஆசிப் கூறினார். நீர் கிடைக்காவிட்டால், பாகிஸ்தான் மக்கள் பசியாலும் தாகத்தாலும் இறக்க நேரிடும்.
பாக்லிஹார் அணை விவகாரமும் பின்னணியும்கடந்த 1960ஆம் ஆண்டு, உலக வங்கியின் மத்தியஸ்தத்தின் கீழ், அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் இடையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளைப் பயன்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வு எட்டப்பட்டது.
பாக்லிஹார் அணை விவகாரம், இரு அண்டை நாடுகளுக்கும் இடையில் நீண்டகால சர்ச்சையாகவே தொடர்கிறது. இந்த விவகாரத்திற்குத் தீர்வு கோரி பாகிஸ்தான் உலக வங்கியின் தலையீட்டை இதற்கு முன்னரே நாடியது என்பதும், உலக வங்கியும் இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிஷன்கங்கா அணை தொடர்பாகவும் பாகிஸ்தான் ஆட்சேபம் எழுப்பி, விசாரணை நடத்தக் கோரி வருகிறது. இந்த இரண்டு அணைகளிலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சுமார் 475 மில்லியன் கன மீட்டர் தண்ணீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்ட பாக்லிஹார் அணையின் மின் உற்பத்தித் திட்டத்திற்கு 'பாக்லிஹார் நீர் மின் திட்டம்' (Baglihar Hydro Electric Project) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் 900 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம்.
கடந்த 1992ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், பல ஆண்டுக் காலமாக பரிசீலனையில் இருந்தது. பிறகு 1999ஆம் ஆண்டுதான் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட பாக்லிஹார் நீர்மின் திட்டத்தின் பணிகள் 2008ஆம் ஆண்டில் நிறைவுபெற்றன.
பாக்லிஹார் அணையின் மதகுகள் மூடப்பட்டது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது.
அணையின் நீர்த்தேக்கத்தில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை அகற்றுவதற்காக மதகுகளின் கதவுகள் கீழிறக்கப்பட்டதாக செய்தி கூறுகிறது. அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டதன் காரணமாக பாகிஸ்தானுக்கு செல்லும் நீரோட்டம் 90 சதவிகிதம் குறைந்துள்ளதாக தேசிய நீர் மின்சாரக் கழகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
கிஷன்கங்கா அணையிலும் இதேபோன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அந்த அதிகாரி ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் தெரிவித்தார்.
தனது பெயரை வெளியிட விரும்பாத மற்றொரு அதிகாரி கூறிய தகவல் இது: "பாக்லிஹார் அணையின் மதகுகள் மூடப்பட்டுள்ளன. நீர்த்தேக்கத்தில் இருந்து வண்டல் மண்ணை அகற்றும் பணிகள் முடிவடைந்துவிட்டன. இனி அணையில் தண்ணீர் நிரப்பப்பட வேண்டும், பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை தொடங்கின."
தி ட்ரிப்யூனில் வெளியான ஒரு செய்தியின்படி, நீர்த்தேக்கத்தை தூர்வாரி, நீர் நிரப்பும் செயல்முறை இப்போது முதல் முறையாக மேற்கொள்ளப்படவில்லை, வழக்கமாக வட இந்தியாவில் உள்ள அணைகளில் ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள்தான் இவை.
மே முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை பொழியும் காலகட்டத்தில், வட இந்தியாவின் அணைகளுக்கு அதிகபட்ச அளவு தண்ணீர் வந்து சேரும். இப்போது பாக்லிஹார் நீர்த்தேக்கத்தில் தூர்வாரப்பட்டு இருப்பதால், இந்த அணையில் தண்ணீர் நிரம்ப அதிக காலம் எடுக்கும்.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில், மேற்குப் பகுதி நதிகளில் ஒன்றான செனாப் நதியும் இடம்பெற்றுள்ளது. விவசாயம், வீட்டு உபயோகம் மற்றும் மின் உற்பத்திக்கான தண்ணீரைப் பயன்படுத்த இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது. ஆகையால், அந்த நதியில் 1992இல் பாக்லிஹார் அணை கட்ட இந்தியா திட்டமிட்டது முதலே பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த அணை தொடர்பாக ஓர் உடன்பாட்டை எட்டுவதற்காக உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
நதியின் மேல்பகுதியில் இந்தியாவும், கீழ் பகுதியில் பாகிஸ்தானும் இருப்பதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது அணையில் நீரை இந்தியாவால் தடுத்து நிறுத்த முடியும் என்றும், தண்ணீர் அதிகளவில் வந்தால் அணையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் திறந்துவிட முடியும் என்றும் கூறும் பாகிஸ்தான், இது தங்கள் நாட்டிற்கு ஆபத்தானது என்றும் கூறியது.
பாகிஸ்தானின் இத்தகைய அச்சங்களைப் போக்க எந்தத் தீர்வையும் வழங்க முடியாது என்று இந்தியா தரப்பு தெரிவித்துவிட்டது.
இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் பலமுறை கலந்துரையாடிய பிறகு, 1999இல் அணையைக் கட்டுவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டு, இறுதியாக அணை கட்டுமானப் பணிகள் தொடங்கின. ஆனால் கட்டுமானம் தொடங்கிய பிறகும் பாகிஸ்தானின் ஆட்சேபனைகள் தொடர்ந்தன.
எனவே, பல சுற்று விவாதங்கள் நடத்தப்பட்டன, ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரவே இல்லை.
பாக்லிஹார் தவிர, செனாப் நதியில் பல நீர்மின் திட்டங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன. செனாப் மற்றும் அதன் துணை நதிகளில் நான்கு நீர்மின் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை 2027-28ஆம் ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கிவிடும்.
பகல் துல் (1000 மெகாவாட்), கிரு (624 மெகாவாட்), குவார் (540 மெகாவாட்) மற்றும் ரத்லே (850 மெகாவாட்) என நான்கு நீர்மின் திட்டங்களை, தேசிய நீர்மின் கழகம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில மின் மேம்பாட்டுக் கழகம் கூட்டாகச் செயல்படுத்தி வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோதி, 2018ஆம் ஆண்டில் பகல் துல் திட்டத்திற்கும், 2019ஆம் ஆண்டில் கிரு திட்டத்திற்கும், 2022ஆம் ஆண்டில் குவார் நீர்மின் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
பகல் துல் நீர்மின் திட்டத்தில் 66 சதவிகித வேலைகளும், கிருவில் 55 சதவிகித வேலைகளும், குவார் நீர்மின் திட்டத்தில் 19 சதவிகித வேலைகளும், ரத்லே பகுதியில் 21 சதவிகித வேலைகளும் நிறைவடைந்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தி ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
இந்த நான்கு நீர்மின் திட்டங்களையும் பாகிஸ்தான் எதிர்க்கிறது. அதிலும் குறிப்பாக ரத்லே மற்றும் கிஷன்கங்கா திட்டங்கள் மீது பாகிஸ்தானின் எதிர்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இந்த அணைகளின் வடிவமைப்புகள் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறுவதாக இருப்பதாக பாகிஸ்தான் குறை கூறுகிறது.
பாக்லிஹார் தவிர, பகல் துல், கிரு, குவார், ரத்லே ஆகியவை 3,014 மெகாவாட் மின் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளன. இந்தத் திட்டங்களில் இருந்து ஆண்டுதோறும் 10,541 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் மட்டும் 18,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 11,823 மெகாவாட் மின்சாரம் செனாப் படுகையில் மட்டுமே தயாரிக்கப்படும் என அனுமானிக்கப்படுகிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.