பெங்களூரு பசவேஸ்வர் நகர் பகுதியில் ஸ்பீக்கர் மூலம் மொபைலில் உரையாடுவதற்காக ஏற்பட்ட வாக்குவாதம் கொடூர கொலையில் முடிந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மகாகணபதி நகரில் வசித்து வந்த நமீதா சாஹுவை (வயது 43) அவரது கணவர் லோகேஷ் குமார் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானை சேர்ந்த லோகேஷ், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நமீதாவை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் புகைப்பட ஸ்டுடியோ நடத்தி வந்தார். இவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளார். கடந்த ஏப்ரல் 24 அன்று மாலை, நமீதா தனது சகோதரருடன் பேசிக் கொண்டிருந்தபோது, ஸ்பீக்கர் போட்டு பேசுமாறு லோகேஷ் கூறியுள்ளார், இதை மறுத்ததற்காக ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது.
வீட்டு உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பசவேஸ்வர் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், லோகேஷ் தனது மனைவியை அடித்து, கழுத்தை நெரித்து கொன்றது உறுதி செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். குடும்பப் பிரச்சனை காரணமாக கடந்த சில வாரங்களாக இருவரும் அடிக்கடி சண்டையிடுவது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மகாகணபதி நகர் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.