இந்திய அரசியல்வாதியும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி மீது இரட்டை குடியுரிமை வைத்துள்ளதாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் ராகுல் காந்தி இந்திய தேர்தலில் போட்டியிட தகுதியானவர் அல்ல.
மக்களவை உறுப்பினர் பதவியையும் வகிக்க முடியாது என விக்னேஷ் ஷிஷிர் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடியுரிமை வைத்துள்ளதற்கான ஆவணங்கள் மற்றும் பிரிட்டிஷ் அரசின் சில இமெயில்கள் தன்னிடம் ஆதாரமாக உள்ளது எனவும் தெரிவித்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ராகுல் காந்தியின் பிரிட்டிஷ் குடியுரிமை குறித்து அந்நாட்டு அரசாங்கத்திடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதன் தொடர் விசாரணையை மே 5ஆம் தேதி ஒத்திவைத்தது. அதன்படி அந்த மனுவின் விசாரணை நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரின் புகாரை தீர்ப்பதற்காக மத்திய அரசிற்கு எந்த ஒரு கால அவகாசத்தையும் வழங்க முடியாது எனவும், அந்த மனுவை நிலுவையில் வைத்திருப்பதற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை” என கூறிய நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் மனுதாரர் பிற மாற்று சட்ட தீர்வுகளை ஆராய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.