பஹல்காம் தாக்குதல் நடக்கப்போவதாக பிரதமர் மோடிக்கு 3 நாட்களுக்கு முன், புலனாய்வு தகவல் கொடுக்கப்பட்டதாக காங்கரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 21ம் தேதி தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடக்கவிருக்கும் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு உளவுத்துறை தகவல்கள் கொடுத்ததாகவும், ஆனால் அந்தத் தகவல்களை பாதுகாப்புப் படையினருடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். முன்னரே அறிந்ததால்தான் காஷ்மீர் பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்தார். பிரதமர் தனது உயிருக்கு கொடுக்கும் மதிப்பை சுற்றுலா பயணிகளின் உயிருக்கு ஏன் கொடுக்கவில்லை, காஷ்மீரில் பாதுகாப்பை ஏன் பலப்படுத்தவில்லை? என்றும் காங்கரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.