காதல் திருமணம் செய்த மூன்று மாதத்தில் மனைவியை தலையணையை வைத்து அழுத்தி கொன்ற கணவர்
பவானியில் மனைவியை தலையணையை வைத்து அழுத்தியும், கழுத்தை நெறித்தும் கொலை செய்த கணவர் போலீசில் சிக்கினார்.
ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட கல்தொழிலாளர் இரண்டாவது வீதி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (22), இவரது மனைவி சூரிய பிரபா (38). கார்த்தி கட்டிட வேலைக்கு சென்று வரும் நிலையில், நேற்று காலை (4-ம் தேதி) தனது மனைவி சூரிய பிரபாவை பவானி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது மனைவி மூச்சுப் பேச்சு இல்லாமல் வீட்டில் இருந்ததாகவும், எனவே உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்தது வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அங்கு சூரிய பிரபாவை பரிசோதித்த மருத்துவர்கள் சூரிய பிரபா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் சூரிய பிரபாவின் உதடு மற்றும் காது பகுதிகளில் காயம் இருந்ததை கவனித்தனர். உடனடியாக சூரிய பிரபா உயிர் இழந்தது குறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் கார்த்திக்-சூரிய பிரபா திருமணமாகி மூன்று மாதங்களே ஆனதன் காரணமாக கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்தனர். மேலும் சந்தேக மரண வழக்காக பதிவு செய்து சூரிய பிரபாவின் உடலை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். சூரிய பிரபாவின் உதடு மற்றும் காது பகுதிகளில் காயம் இருந்ததன் காரணமாக சூரிய பிரபாவின் கணவரான கார்த்திகை போலீசார் தங்களது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து கார்த்திக்கிடம் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பிரேத பரிசோதனையில் சூரிய பிரபா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சந்தேக மரண வழக்கை கொலை வழக்கமாக பதிவு செய்து கார்த்திக் இடம் உரிய முறையில் விசாரணை நடத்தியதில் கொலைக்கான பின்னணி வெளிவந்தது. இதில் கார்த்திக் விசாரணையில் தெரிவித்தாவது, “பவானியை சேர்ந்த கார்த்தி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக திருச்சியில் தனியார் பேருந்து ஒன்றில் கிளீனர் ஆக பணியாற்றி வந்துள்ளார். அப்போது பேருந்தில் பயணித்த திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த 38 வயதான திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த சூரியபிரபா அறிமுகமாகியுள்ளார். சூரிய பிரபா 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரே மாதத்தில் கணவனைப் பிரிந்து அவரது தாய் வீட்டில் வசித்துக் கொண்டு அங்குள்ள துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
முதலில் நண்பர்களாக பழகிய கார்த்திக்கும் சூரியபிரபாவும் பின்னர் காதலர்களாக மாரி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு பவானிக்கு வந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கார்த்தி மது குடித்துக் கொண்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் கார்த்திக் வேறு சில பெண்களுடன் தொடர்பில் இருப்பதனை அறிந்த சூரிய பிரபா அதனையும் கண்டித்ததுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் கார்த்தி தனது வீட்டின் எதிரே வாடகைக்கு குடியிருக்கும் சித்தியின் வீட்டின் மாடியில் போய் தனது மனைவியுடன் உறங்கி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
சம்பவத்தன்று இரவு வழக்கம்போல குடிபோதையில் வந்த கார்த்தி தனது மனைவியை அழைத்துக் கொண்டு வழக்கம்போல் எதிரே வாடகைக்கு குடியிருக்கும் சித்தியின் வீட்டின் மொட்டை மாடிக்கு உறங்குவதற்காக சென்று உள்ளார். அப்போது கார்த்திக்கின் செல்போனை சூரிய பிரபா எடுத்துப் பார்த்துள்ளார். அதில் சில பெண்களின் புகைப்படம் இருந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கார்த்திக், சூரிய பிரபாவை தாக்கியதோடு அவரது உதட்டையும் கடித்துள்ளார். தொடர்ந்து அவரை கீழே தள்ளி கழுத்தை நெறித்தும் தலையணையை வைத்து அமுக்கியும் கொலை செய்துள்ளார். கொலை செய்த பின் என்ன செய்வது என்று தெரியாமல் மனைவியின் சடலத்துடனே மொட்டை மாடியில் இரவு முழுவதும் உறங்கி விட்டு , காலை எழுந்து மனைவி மூச்சுப் பேச்சு இல்லாமல் இருப்பதாக கூறி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்ததாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து பவானி போலீசார் கார்த்திக்கை கைது செய்து குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.