உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ராயல் ரெஸ்பைட்டில், 24 வயதான தனியார் பள்ளி ஆசிரியர் சந்திரபன் மற்றும் 14 வயதான மாணவி ஒருவர் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் திங்கட்கிழமை காலை ஹோட்டலுக்கு வந்து அறை எண் 204-ல் தங்கியிருந்தனர். மாலை வரை அவர்கள் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த ஹோட்டல் நிர்வாகம் கதவை திறந்தபோது, இருவரும் மரணமடைந்த நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில், இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இறந்த மாணவி, சந்திரபனின் மாணவியாக இருப்பதும், இருவருக்கும் இடையே காதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை மாணவியின் பெற்றோர் எதிர்த்த நிலையில் சந்திரபனிடம் டியூஷன் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தனர். இருப்பினும், இருவரும் பள்ளியில் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளனர்.
சந்திரபனின் தந்தை பிரமோத் குமார், தனது மகனிடம் இந்த உறவை முறிக்க அறிவுறுத்தியதாகவும், மாணவியின் குடும்பத்தவர்களுடனும் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், இருவரும் சேர்ந்து வாழத் தீர்மானித்ததாகத் தெரிகிறது. ஹோட்டலில் பயன்படுத்தப்பட்ட ஆதார் அட்டை போலியானதாக இருப்பதும், ஒரு மைனர் மாணவி எப்படி அறை முன்பதிவு செய்தார் என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தடயவியல் குழு மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. மாவட்ட காவல்துறை மேலாளர் ஏஎஸ்பி மயங்க் பதக், இது தற்கொலை என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதாகவும், ஹோட்டல் நிர்வாகத்திடமிருந்து தகவல்களை சேகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.