கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து அந்நாட்டுப் படையினா் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் மோட்டாா் குண்டுகள் மூலம் அத்துமீறி கடும் தாக்குதலைத் தொடுத்தனா்.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தொடங்கி புதன்கிழமையும் இடைவிடாமல் நீடித்த இத்தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட பொதுமக்கள் 12 பேரும் ராணுவ வீரா் ஒருவரும் உயிரிழந்தனா். இந்நிலையில், புதன்கிழமை இரவும் பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கித் தாக்குதல் நடத்தியதால் எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
குப்வாரா, பாரமுல்லா, ஊரி பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு இந்திய பதிலடி கொடுத்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. எல்லையோர கிராமங்களில் உள்ள மக்களைக் குறிவைத்து அவர்களின் வீடுகள் மீது கண்மூடித்தனமாக பீரங்கித் தாக்குதல் நடத்தப்படுவதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.