2 இடங்களில் இன்றும் போர்க்கால ஒத்திகை!
Dinamaalai May 08, 2025 04:48 PM

இந்தியா முழுவதும் உள்துறை அமைச்சகம் சார்பில் 244 இடங்களில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடத்தப்பட்டது.  இவற்றில் சென்னையில் உள்ள கல்பாக்கம், துறைமுகம் ஆகிய 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தன. இந்தியாவில் கடைசியாக கடந்த 1971-ம் ஆண்டு போர்க்கால ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. 

அதன்பிறகு 54 ஆண்டுகள் கழித்து மீண்டும் நேற்று  மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.  இந்த போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையின்போது மின்சாரம் துண்டிப்பு, இணைய சேவை துண்டிப்பு, போக்குவரத்து மாற்றம் உள்ளிட்டவை நடத்தப்படும். குறிப்பாக வான்வழி தாக்குதலின்போது ஒலிக்கப்படும் சைரன் ஒலிப்புகளை எழுப்பியும் போர் ஒத்திகை நடைபெற்றது. மேலும், சில பொது இடங்களுக்கான அனுமதி தடை செய்யப்பட்டும் ஒத்திகை நடைபெற்றதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில், சென்னையில் 2வது நாளாக இன்று 2 இடங்களில் போர் சூழல் ஒத்திகை நடைபெறும் என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. சென்னை மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ஒத்திகை நடக்கிறது. உள்துறை அமைச்சக அறிவுரைப்படி இன்று மாலை 4 மணிக்கு ஒத்திகை நடைபெறும். ஒத்திகை குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம். பிற அனைத்து செயல்பாடுகளும் இயங்கும் என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.