15 முக்கிய நகரங்களில் பாகிஸ்தான நடத்த இருந்த தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா..!
Newstm Tamil May 09, 2025 08:48 AM

ஜம்மு மற்றும் காஷ்மீரில் முக்கிய சுற்றுலா பகுதியான பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்றிருந்த 26 பேர் பலியானார்கள். அவர்கள் அனைவரும் ஆண்கள் ஆவர். அவர்களின் மதம் என்னவென கேட்கப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. எனினும், இதற்கு உலக நாடுகள் தரப்பில் இருந்து பெரிய அளவில் எதிர்வினை வரவில்லை. இரு வார காலம் அமைதியாக இருந்த இந்தியா இதற்கு தக்க பதிலடி கொடுத்தது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துல்லிய தாக்குதலில், 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் இலக்காக கொள்ளப்பட்டன. இதில், பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டு உள்ளது என பாதுகாப்பு துறை அறிவித்து உள்ளது. இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலம் மீது பாகிஸ்தான் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. காஷ்மீரின் பாரமுல்லா, உரி, பூஞ்ச் பகுதிகளில் கனரக பீரங்கிகளை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது.

காஷ்மீரின் குப்வாரா, பூஞ்ச், ரஜோரி, மெந்தார் உள்ளிட்ட நகரங்கள் மீதும் தாக்குதலை நடத்தியது. இந்நிலையில், இதற்கு இந்திய ஆயுதப்படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. எல்லையில் இருந்து ஏறக்குறைய 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாகூரில் ராணுவ நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

இதில், லாகூரில் உள்ள பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு பிரிவான எச்.கியூ.-9 தாக்கி அழிக்கப்பட்டது. பீரங்கி கொண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பாகிஸ்தானின் முயற்சியையும் இந்தியா முறியடித்து உள்ளது. இதேபோன்று டிரோன்களை கொண்டு தாக்க முயன்ற அந்நாட்டு முயற்சியையும் இந்திய ராணுவம் முறியடித்து உள்ளது. பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு ரேடார்கள் தகர்க்கப்பட்டன. வான் தடுப்பு பிரிவையும் இந்தியா தாக்கி அழித்தது. காலையில் இருந்து இந்தியாவின் இந்த பதிலடி தொடர்ந்து வருகிறது.

இதில், ஜம்மு, ஸ்ரீநகர், பதன்கோட், ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், சண்டிகார் உள்ளிட்ட 15 நகரங்களை தாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப்பின் ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், சண்டிகார் ஆகிய நகரங்களிலும், காஷ்மீரின் ஜம்மு, ஸ்ரீநகர், பதன்கோட் உள்ளிட்ட நகரங்களிலும் தாக்குதலை பாகிஸ்தான் தீவிரப்படுத்திய நிலையில், அதனை இந்தியா முறியடித்து உள்ளது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.