பீகார் மாநிலம் சசார மாவட்டத்தில் இருந்து ஒரு மனதை உலுக்கும் செய்தி வெளியாகியுள்ளது. தினாரா பகுதியில் உள்ள கோபால்பூர் கிராமத்தைச் சேர்ந்த சைஃபுல்லா கதுன் என்ற பெண், கடந்த வாரம் தனது 15வது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், அந்தப் பெண் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர், இதன் விளைவாக அவர் ஏற்கனவே பெற்றிருந்த 14 குழந்தைளும் உயிரிழந்துள்ளனர்.
தற்போது பிறந்த 15வது குழந்தையின் எடை வெறும் அரை கிலோ மட்டுமே. பிரசவத்திற்கு பிறகு, தாயும் பிள்ளையும் மோசமான உடல்நிலையில் இருந்ததால், முதலில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் உடல்நிலை மேம்படாததால், இருவரும் சதார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் உள்ள சிவில் சர்ஜன் டாக்டர் மணிராஜ் ரஞ்சன் தலைமையில் தொடர்ந்து கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. தற்போது தாயின் உடல்நிலையில் சிறிய முன்னேற்றம் காணப்படுகிறது; குழந்தையின் எடை 200 கிராம் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
14 குழந்தைகளை இழந்த பின்னிலும் தாயாக வேண்டும் என்ற அவரது பிடிவாதம், பலரையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.. மருத்துவர்களின் கூற்றுப்படி, ஊட்டச்சத்து குறைபாடு, இந்த பெண்ணின் அனைத்து குழந்தைகளுக்கும் பிறப்பிலேயே உயிரிழப்புக்குக் காரணமாக இருந்துள்ளது. இந்த செய்தி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இதனைப்பற்றி சிவில் சர்ஜன் டாக்டர் மணிராஜ் ரஞ்சன், “இந்த தாயையும் குழந்தையையும் காப்பாற்றியதில் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார். மருத்துவக் குழுவின் பணிக்கு நன்றியறிகுறியாக, சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டியுள்ளார். அரசு மற்றும் சுகாதாரத்துறை ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
The post appeared first on .