மே 31ஆம் தேதி வரை உங்கள் வங்கிக் கணக்கில் 436 ரூபாய் வைத்திருக்குமாறு வங்கிகள் SMS அனுப்பி வருகின்றன. இது நிறையப் பேருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏன் இந்த SMS வருகிறது என்ற யோசிக்கிறார்கள். உண்மையில் இந்த செய்தி பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தின் பயனாளிகளுக்கு மட்டுமே அனுப்பப்படுகிறது.
இந்தத் திட்டத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் பிரீமியம் தொகை செலுத்த வேண்டும். அதற்கான கடைசி தேதியை மே 31 என்று மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதுவொரு மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்துக்கான பிரீமியம் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இருந்து தானாக பிடித்தம் செய்யப்படும். மே 31ஆம் தேதிக்குள் உங்களுடைய வங்கிக் கணக்கில் 436 ரூபாய் பேலன்ஸ் இல்லை என்றால், உங்கள் காப்பீடு தானாகவே ரத்து செய்யப்படலாம்.
காப்பீடு ரத்து செய்யப்பட்டால், இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற முடியாது. இதன் காரணமாக வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு செய்திகளை அனுப்பி வருகிறது. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் ரூ.436 மட்டுமே செலுத்துவதன் மூலம் ரூ.2 லட்சம் வரை ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறலாம்.
திட்டத்தின் பயனாளி இறந்துவிட்டால் இந்தக் காப்பீடு வழங்கப்படும். இந்தப் பிரீமியம் ஒரு வருட காலத்திற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும். பிரீமியம் தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே கழிக்கப்படும். 18 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையலாம்.
50 வயதிற்கு முன் இந்தத் திட்டத்தில் சேர்ந்தால் 55 வயது வரை அதில் நீடிக்கலாம். ஆனால் இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பிரீமியம் தொகையைத் தொடர்ந்து செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தில் சேர பொதுச் சேவை மையம், வங்கி வலைத்தளம் அல்லது தபால் அலுவலகம் மூலம் பதிவு செய்யலாம்.