இந்திய ராணுவத்தின தாக்குதலில் உயிரிழந்த 5 முக்கிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் யார்?
Top Tamil News May 11, 2025 10:48 AM

இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் 5 முக்கிய தீவிரவாதிகள் உயிரிழந்தனர். லஷ்கர் இ தொய்பா பொறுப்பாளர் முடாசர் காதியன் காஸ் என்ற அபு ஜுண்டல், ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த முகமது யூசுப் அஸார் என்கிற உஸ்தாத், காலித் என்கிற அபு ஆகாஷா, ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பொறுப்பாளர் ஹபீஸ் முகமது ஜமீல், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தளபதி முகமது ஹசன் கான் ஆகியோர் உயிரிழந்த 5 முக்கிய தீவிரவாதிகள் ஆவர்.இறந்த 5 பேருமே லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய 2 அமைப்புகளில் முக்கியமான பொறுப்பில் இருந்தவர்கள் ஆவர்.


முடாசர் காதியன் காஸ்: லஷ்கர்-இ-தொய்பாவின் மூத்த தளபதியான முடாசர் காதியன் காஸ் எனப்படும் அபு ஜுண்டல், லஷ்கர் தீவிரவாத அமைப்பின் தலைமையகமான முரிட்கேயில் உள்ள மர்காஸ் தைபாவின் பொறுப்பாளராக இருந்தார். அவரது உடலுக்கு பாகிஸ்தான் ராணுவம் மரியாதை அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் சார்பாக மலர்வளையம் வைக்கப்பட்டு இருக்கிறது. சர்வேதச தீவிரவாதியான ஹபீஸ் அப்துல் ரவூஃப் தலைமையில் நடந்த இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் பஞ்சாப் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆகியோர் கலந்து கொண்டதாகத் தகவல் வந்துள்ளது.

முகமது யூசுப் அஸார்: சர்வதேச தீவிரவாதி மசூத் அஸாரின் மற்றொரு மைத்துனரான முகமது யூசுப் அஸார் எனப்படும் உஸ்தாத் ஜி என்பவரும் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர் முகமது சலீம் அல்லது கோசி சஹாப் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஜெய்ஷ்-இ-முகமதுவின் தீவிரவாத நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது தெரியவந்துள்ளது.

தீவிரவாதிகளின் ஆயுதப் பயிற்சிக்குப் பொறுப்பாளராக இருந்த இவருக்கு, ஜம்மு-காஷ்மீரில் நடந்த ஏராளமான தீவிரவாதத் தாக்குதல்களிலும் தொடர்பு இருக்கிறது. குறிப்பாக 1999-ல் மசூத் அஸார் விடுவிக்கப்படக் காரணமாக இருந்த காந்தஹார் விமானக் கடத்தலிலும் இவருக்கு முக்கிய பங்கு இருந்தது.

முகமது ஹசன் கான்: ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முகமது ஹசன் கானும் கொல்லப்பட்டார். இவர் ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பின் தளபதியான முஃப்தி அஸ்கர் கானின் மகன் ஆவார்.

அபு ஆகாஷா என்ற காலித்: லஷ்கர்-இ-தொய்பா தளபதியான காலித் என்பவர் நீண்ட காலமாகவே ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகப் புகார்கள் உள்ளன. ஆப்கானிஸ்தானிலிருந்து ஆயுதக் கடத்தல் தொழிலையும் செய்வதாக இவர் மீது பல்வேறு புகார்கள் உள்ளன. பைசலாபாத்தில் நடந்த இவரது இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஹபீஸ் முகமது ஜமீல்: ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் ஹபீஸ் முகமது ஜமீல். இவர் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மவுலானா மசூத் அஸாரின் மூத்தமைத்துனர் ஆவார். பஹாவல்பூரில் மர்காஸ் சுப்ஹான் என்ற குழுவை வழிநடத்தி வந்துள்ளார். இளைஞர்களைத் தீவிரவாதம் நோக்கி இழுத்தல், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டும் நடவடிக்கைகளிலும் இவர் ஈடுபட்டிருந்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.