நாடு முழுவதும் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. போர் கால பாதுகாப்பு ஒத்திகைகளும் நடத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு போர் காலத்தில் எப்படி செயல்படுவது என்பது குறித்து அறிவரைகள் வழங்கப்பட்டுள்ளது. போலீசாரும் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் 18, 19-ஆம் தேதிகளில் செல்வதாக இருந்தது. இந்த பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனாதிபதி திரெளபதி முர்முவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், 18, 19-ஆம் தேதிகளில் ஜனாதிபதி வருகைக்காக தரிசன சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது, ஜனாதிபதி வருகை ரத்து செய்யப்பட்டதால், இந்த தரிசன சேவை நடைபெறுவதாகவும், இதற்கு சபரிமலை கோயில் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தேஸ்வம் வாரியம் தெரிவித்துள்ளது.