இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்த அறிவிப்பு வந்துள்ளதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த தாக்குதல் நேற்று மாலை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்து இருப்பது வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்று.
போர் நிறுத்த அறிவிப்பு வந்துள்ள நிலையில், பிரதமர் மோடி, அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனே கூட்டவேண்டும். கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு குறித்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளின் கருத்துகளையும் பிரதமர் மோடி கேட்டறிய வேண்டும் என்றும், பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்” என்றும் ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.