உயிரிழந்த ராணுவ வீரர் முரளி நாயக் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம்.. ஆந்திர அரசு அறிவிப்பு!
Newstm Tamil May 12, 2025 10:48 AM

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் முலம் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் குறி வைத்து தாக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ முகாம்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது.

மேலும் இந்திய நகரங்கள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானின், கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியது. காஷ்மீரின் எல்லையோர கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ராணுவ வீரர்கள் சிலரும் வீர மரணமடைந்தனர். அந்த வகையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) பாகிஸ்தான் படைகளின் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டின் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் எம். முரளி நாயக் கொல்லப்பட்டார். இந்நிலையில் முரளி நாயக்கின் குடும்பத்திற்கு
ஆந்திர மாநில அரசு 50 லட்சம் ரூபாய் கருணைத் தொகையை அறிவித்துள்ளது.

மேலும், அவரது குடும்பத்திற்கு ஐந்து ஏக்கர் நிலம் மற்றும் 300 சதுர அடி வீடு வழங்கப்படும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றையும் ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. இதனிடையே ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள கோரண்ட்லா மண்டலத்தின் கல்லிதண்டா குக்கிராமத்தில் ராணுவ வீரர் முரளி நாயக்கின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் முரளி நாயக்கின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் முரளி நாயக்கின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் உதவித் தொகையையும் தனிப்பட்ட முறையில் அறிவித்தார். மேலும் மாநில மற்றும் மத்திய அரசுகள் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று அவர் குடும்பத்தினருக்கு பவன் கல்யாண் உறுதியளித்தார்.

மாவட்ட தலைமையகத்தில் முரளி நாயக்கின் வெண்கல சிலை நிறுவப்படும் என்று பவன் கல்யாண் தெரிவித்தார். உள்துறை அமைச்சர் வி. அனிதா மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோரும் முரளி நாயக்கிற்கு இறுதி மரியாதை செலுத்தினர். அவரது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் நாரா லோகேஷ் உறுதியளித்தார்.

மே 10 ஆம் தேதி முரளி நாயக்கின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. முதலில் பெங்களூரு விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலை அங்கு BC நலத்துறை அமைச்சர் எஸ். சவிதா அதை பெற்றுக் கொண்டார். பின்னர் அவரது உடல் கோரண்ட்லாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. நாயக்கின் கிராமத்திற்குச் செல்லும் வழியில், நூற்றுக்கணக்கான மக்கள் அவரது உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


இந்தியக் கொடியை ஏந்திய மக்கள், 'முரளி நாயக்கின் அமர் ரஹே' என்ற கோஷங்களை எழுப்பினர்.மே 8 ஆம் தேதி இரவு ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) பாகிஸ்தான் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அக்னிவீரரான முரளி நாயக் வீரமரணம் அடைந்தார். பழங்குடியின கிராமமான ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நாயக், இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரில் பதட்டமான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பணியமர்த்தப்பட்டார்.

கோரண்ட்லா மண்டலத்தில் விவசாயத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்த முடவத் ஸ்ரீராம் நாயக் மற்றும் முடவத் ஜோதி பாய் ஆகியோரின் ஒரே மகன் முரளி என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.