வெளிநாடு செல்கிறாரா தோனி.. கருப்பு சட்டையில் இருந்த வாசகங்களால் பரபரப்பு..!
Tamil Minutes May 12, 2025 05:48 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக இருக்கும் எம்.எஸ். தோனி மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளார். காரணம் அவர் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் இருந்த வாசகங்கள் தான்.

இந்த சீசனில் கேப்டனாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட் முழங்கையின் காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றார். ருத்ராஜ் இடத்தில் மும்பையை சேர்ந்த இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சீசனில் அவர் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனம் பெற்றுள்ளார், ஆனால் சென்னை அணிக்கு பெரிதாக பலன் கிடைக்கவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, இந்த சீசன் முற்றிலும் தோல்வி என்ற நிலையை அடைந்து விட்டது. 12 போட்டிகளில் விளையாடி வெறும் 6 புள்ளிகளையே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்தியாவும் பாகிஸ்தானும் இடையே ஏற்பட்ட இராணுவ மோதலால், தற்போது ஐபிஎல் தொடர் இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இருபக்கமும் போர் நிறைவு அறிவிப்பு வெளியிடப்பட்டதையடுத்து, ஐபிஎல் நிர்வாகக்குழு விரைவில் தொடரை மீண்டும் தொடங்க திட்டமிட்டு வருகிறது.

PTI செய்தியின்படி, மீதமுள்ள போட்டிகள் லக்னோவில் நடைபெற இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயன்ட் – ஆர்சிபி போட்டியுடன் தொடரும். நான்கு நகரங்களில் மட்டும் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டால், டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தங்களின் சொந்த மைதானங்களில் விளையாட முடியாமல் போகும்.

இதன்படி மீதமுள்ள 16 போட்டிகள் ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் லக்னோ நகரங்களில் மட்டுமே நடைபெறும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது. ஒன்று ராஜஸ்தான் ராயல்ஸ் எதிரான சென்னையில் உள்ள ஹோம் மைதானப் போட்டி, மற்றொன்று குஜராத் டைட்டன்ஸ் எதிரான அவே போட்டி.

இப்போது சென்னை, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் ஏற்கனவே பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், மீதமுள்ள 4 இடங்களுக்கு 7 அணிகள் இடையிலான கடும் போட்டி நிலவுகிறது. ஆனால், ஐபிஎல் தொடரை மீண்டும் தொடங்க மத்திய அரசின் அனுமதி கிடைக்க வேண்டும் என்பதே நிர்வாகக்குழுவின் எதிர்பார்ப்பு.

இந்த நிலையில் தோனி அணிந்திருந்த கருப்பு சட்டையில் “Duty, Honour, Country” எனும் வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. தோனி பயணித்த விமானத்தில் இருந்த ஒருவர் இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததுடன், அது வைரலாகி வருகிறது. இது அவரது நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவதாக கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. தோனி வெளிநாட்டுக்கு செல்வது போல் தோன்றும் இந்த விமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

https://x.com/thisisbhumika/status/1921399786835472792

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.