தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர், டாக்டர் நம்ரதா சிகுருபதி, 34. ஆந்திராவின் அனந்தபுர் மாவட்டத்தில் உள்ள ராயதுர்கம் பகுதியைச் சேர்ந்தவர்.
போதை பழக்கத்துக்கு அடிமையான இவர், ஆறு மாதங்களுக்கு முன் தன் பணியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், வாட்ஸாப் வாயிலாக கோகைன் போதைப் பொருளை ஆர்டர் செய்து, டெலிவரி பெற்றபோது போலீசாரிடம் நேற்று சிக்கினார்.
போதை பழக்கத்துக்கு அடிமையாக இருந்த நம்ரதாவுக்கு, மும்பையைச் சேர்ந்த ஆன்லைன் போதைப் பொருள் வியாபாரி வான்ஸ் தாக்கர் என்பவரை ஏற்கனவே தெரிந்திருக்கிறது.
எனவே, வான்ஸ் தாக்கரிடம் வாட்ஸாப் வாயிலாக 5 லட்சம் ரூபாய்க்கு கோகைன் அனுப்பும்படி ஆர்டர் கொடுத்த நம்ரதா, அதற்கான பணத்தை ஆன்லைனில் செலுத்தினார்.இதையடுத்து, பாலகிருஷ்ணன் என்பவர் வாயிலாக நம்ரதாவுக்கு கோகைனை வான்ஸ் அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், நம்ரதாவின் சொந்த ஊரான ராயதுர்கத்தில் உள்ள வீட்டுக்கு, கோகைன் எடுத்துச் செல்லப்படும் தகவல் போலீசாருக்கு தெரியவந்தது.இதையடுத்து பாலகிருஷ்ணனை, நம்ரதாவின் வீட்டில் கையும் களவுமாக போலீசார் பிடித்தனர். இருவரையும் கைது செய்ததோடு, 53 கிராம் கோகைன், இரண்டு மொபைல் போன்கள், 10,000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். நம்ரதாவை விசாரித்தபோது, போதைப் பொருளுக்காக மட்டும், 70 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது.