சென்னையில் புறநகர்ப்பகுதிகளை மாநகரத்துடன் இணைப்பதில் மின்சார ரயில்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இன்று மே 12ம் தேதி திங்கட் கிழமை காலை, பலரும் வழக்கம் போல் கல்லூரிகள், அலுவலகங்களுக்கு சென்று கொண்டிருந்தனர். பேருந்துகள், மின்சார, மெட்ரோ ரயில்களும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தன.
இந்நிலையில் சென்னை பரங்கிமலை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இரு கல்லூரி மாணவர்கள் ரயில் மோதி உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் செல்போன் பேசிய படி ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக தகவல்கள் வருகின்றன. இந்த விபத்தை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு படித்து வந்ததும், பெரம்பலூர் முகமது பட்டினம் பகுதியை சேர்ந்த முகமது நபூல் (20), சபீர் அகமது (20) என்பதும் தெரியவந்துள்ளது. எழும்பூரில் இருந்து தாம்பரம் சென்ற ரயில் இவர்கள் மீது மோதியுள்ளது.செல்போன் பேசியபடி கவனக்குறைவாக இருந்ததால் இரு மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.