சட்டப்பூர்வ அனுமதியின்றி அமெரிக்காவில் வசிக்கும் ஒருவரைக் கைதுசெய்து, சிறையில் அடைத்து, நாடு கடத்துவதற்கு சுமார் 17,000 டாலர் செலவாகும். இந்தச் சூழலில், தாமாகவே நாட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு ஒரு சிறு தொகையை வழங்குவதும் பயணச் செலவுகளை ஏற்றுக்கொள்வதும் மிகவும் குறைந்த செலவுள்ள விஷயம் என்று ட்ரம்ப் நிர்வாகம் கருதுகிறது.
‘நீங்கள் இங்கு சட்டவிரோதமாக வசிக்கிறீர்கள் என்றால், கைது செய்யப்படுவதைத் தவிர்க்க அமெரிக்காவிலிருந்து வெளியேறுவதற்கான சிறந்த, பாதுகாப்பான மற்றும் மலிவான வழி தானாக முன்வந்து வெளியேறுவதுதான்’ என்று உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மில்லியன் கணக்கான மக்களை நாடு கடத்துவதாக ட்ரம்ப் உறுதியளித்திருந்தாலும், இதுவரை பிடன் நிர்வாகத்தின் காலத்தை விடக் குறைவானவர்களை மட்டுமே அவரால் நாடு கடத்த முடிந்திருக்கிறது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும் பலர் தானாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேற ஊக்குவிப்பதற்காக, டிரம்ப் அரசு பிற நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. கடுமையான அபராதங்களை விதித்து மிரட்டுவது, சட்டப்பூர்வ அந்தஸ்துகளைப் பறிப்பது, கைது செய்து குவாண்டனாமோ விரிகுடா, எல் சால்வடாரில் உள்ள மோசமான சிறைகளுக்கு அனுப்புவது ஆகியவை நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன.