மதுரையில் அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசி பரபரப்பை ஏற்படுத்தியவர் பாஜகவைச் சேர்ந்த சரண்யா. அதன் பின்னர் பரவலாக கவனிக்கப்பட்ட அவர், பட்டுக்கோட்டை அருகே தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் திடீர் திருப்பமாக சரண்யாவின் 2வது கணவர் பாலனின் முதல் மனைவி மகன் கபிலன், குகன் உள்ளிட்ட 3 பேர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்துள்ளனர். அவர்களைப் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கபிலன், சரண்யாவை துடிதுடிக்க தலையைத் துண்டித்துக் கொலைச் செய்ததாக காவல்நிலையத்தில் விசாரணையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சரண்யாவின் 2வது கணவர் பாலனின் சொத்துக்களை அவரது மகன் கபிலனுக்கு வழங்குவதற்கு சரண்யா எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மூன்று பேரும் சரணடைந்த நிலையில், அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த சரண்யா(35) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கும் திருமணம் ஆகி 15 வயதில் சாமுவேல் என்ற மகனும், 13 வயதில் சரவணன் என்ற மகனுடன் மதுரையில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2021ல் சண்முகசுந்தரம் இறந்து விட்டதால், சரண்யா பட்டுக்கோட்டை வட்டம், கழுகபுலிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாலன்(45) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் உதயசூரிபுரம் மீன் மார்க்கெட் அருகே வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
பாலனும், சரண்யாவும் உதயசூரியபுரம் கடைத்தெருவில் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு பாலன் கடையை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் சரண்யாவின் மகன்களை அழைத்துக் கொண்டு சற்று முன்னதாக சென்றுள்ளார்.
அதன் பின்னர் சரண்யா கடையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சரண்யாவின் வீட்டிற்கு செல்லும் சந்துப் பகுதியில், சரண்யாவின் கழுத்து மற்றும் தலையின் பின்பக்கம் வெட்டியுள்ளனர். இதில் சரண்யா தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.