பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.
இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டன.
இதனால் பாகிஸ்தான், இந்திய எல்லை பகுதிகளில் ட்ரோன் மற்றும் பீரங்கி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இருப்பினும், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றைச் சுட்டு வீழ்த்தியது.
தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வந்தது.
இந்நிலையில் நேற்று(மே 10) மாலை இரு நாடுகளுக்கிடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான் முதலில் அறிவித்திருந்தார்.
மேலும் ‘அமெரிக்காவின் பேச்சுவார்த்தையை ஏற்று தாக்குதலை நிறுத்தியதற்கு நன்றி’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி, ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்க அரசின் தலையீடு ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடிதம் எழுதி இருக்கின்றனர்.