எந்த வகையிலும் இந்த முடிவு நல்லதே!
Dhinasari Tamil May 11, 2025 09:48 PM

#featured_image %name%

  • ‘துக்ளக்’ சத்யா

இந்தியா பாகிஸ்தான் மோதல் எந்த வகையில் முடிக்கப்பட்டிருந்தாலும், முடிவுக்கு வந்தது நல்லதுதான்.

இந்திய ராணுவம் தன் வலிமையை பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்துக்குமே நிரூபித்து விட்டது. அப்படியே பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்தும் பாகிஸ்தானைத் துரத்திவிட்டு நம் வசமாக்கியிருக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. காஷ்மீர் நமதே என்பதால், பாஜக அரசுக்கும் அந்த இலக்கு உண்டு.

ஆனால், மத்தியஸ்தம் செய்ய முயன்ற அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஏனோ அதை விரும்பாததால் இந்தியாவும் தன் எண்ணத்தை தற்காலிகமாக விட்டுக் கொடுத்துள்ளது.

இந்திய ராணுவம் வலிமை வாய்ந்ததே தவிர, இந்தியா யுத்தத்தை விரும்பும் எண்ணம் கொண்டதல்ல.

எந்த இரு நாடுகள் மோதினாலும்,உலகின் மற்ற நாடுகள் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படும் என்பதால், சமரச முயற்சிக்கு மோடியும் இடம் கொடுத்தார். இது அமெரிக்காவின் வெற்றியல்ல. இந்தியாவின் சாத்வீக உணர்வின் அடையாளம்.

அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதால் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களைத் தாக்கியது இந்தியா. ஆனால், தங்கள் நாட்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதால் தாக்குதலில் இறங்கியது பாகிஸ்தான். இந்த வித்தியாசம் எல்லா நாடுகளுக்கும் தெரியும்.

சண்டை தொடர்ந்திருந்தால், மீள முடியாத பேரழிவை பாகிஸ்தான் சந்தித்திருக்கும். அதனால்தான், இந்தியாவைக் கட்டுப்படுத்தும்படி அமெரிக்காவிடம் அந்நாடு கெஞ்சியது.

அமைதியை ஏற்படுத்தி விட்டோம் என்ற பெருமையை அமெரிக்கா விரும்பியது. அந்நாட்டுடனான சுமுக உறவு தொடர்வது இந்தியாவுக்கு நல்லது என்பதால் மோடி அதற்கு இணங்கியிருக்கிறார். எனவே அறிவிக்கப்பட்டது போர் நிறுத்தம்.

தோல்வியில் முடியக் கூடாதே என்ற வீம்பிற்காக, போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகும் கொஞ்சம் தாக்குதலில் இறங்கி அற்ப மகிழ்ச்சி அடைந்தது பாகிஸ்தான். அதற்கும் உடனே பதிலடி தரப்பட்டு விட்டது.

பேச்சு வார்த்தைக்கே லாயக்கற்ற நாடு பாகிஸ்தான். தன்னால் வெல்ல முடியாது என்று தெரிந்தும் மூர்க்கத்தனத்தைக் காட்டுவது அதன் இயல்பு. அதற்கான பலனையும் அது அடைந்து விட்டது.

பாகிஸ்தானுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது. இன்னொரு முறை இந்தியாவுடன் மோதினால் தாங்க மாட்டோம் என்று அதற்கு தெரிந்து விட்டது. அந்த வகையில் இந்தியாவுக்கு இது வெற்றிதான்.

சர்வதேச அழுத்தத்துக்கு பணிந்து இந்தியா போர் நிறுத்தத்துக்கு சம்மதித்து விட்டதாக செய்யப்படுகிற பிரசாரம் பொறுப்பற்றது.

எதற்கும் பணிய வேண்டிய நிலையில் இந்தியா இல்லை. சிந்து நதி ஒப்பந்த ரத்து அப்படியேதான் உள்ளது. விசா ரத்து திரும்பப் பெறப்படவில்லை. இன்னும் பல விஷயங்கள் பேசப்பட வேண்டியுள்ளது. அதன் விளைவுகள் பின்னரே தெரியும்.

உள் நாட்டிலேயே ஒரு மினி பாகிஸ்தான் இருப்பதை பலரது பேச்சும் நடவடிக்கைகளும் உணர்த்தியுள்ளன. மோடி போன்றவர்களின் ஆட்சியில்தான் அத்தகையவர்கள் ஓரளவாவது அடங்கியிருப்பார்கள். அந்த ஒரு காரணத்திற்காகவே அவருடைய கை ஓங்கியிருப்பது நல்லது.

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.