இது குறித்து சென்னை மெட்ரோ சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் நிறுவன தலைவர் ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முழுவதும் உள்ள பொறியாளர்கள் சங்கங்கள்(பேசியாட்), கட்டுமானத்துறையை சேர்ந்தவர்களான கட்டுநர் சங்கம், கிரிக், கட்டுமான தொழிலாளர் மத்திய சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், நிலதரகர்கள் சங்கம், நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் சங்கம், பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர் சங்கம், பிளை ஆஷ் பிரிக் அசோசியேசன் என அனைவரும் இணைந்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்திட விலை நிர்ணய குழு அமைத்திட வேண்டும். ஆற்று மணல் குவாரிகளை உடனே திறந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்த்திட இன்று மே 12ம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜல்லி கற்களின் விலை யூனிட்டுக்கு 3000 என்று இருந்தது. 2025 ஜனவரி மாதம் அதை யூனிட்டுக்கு 4000 ஆக உயர்த்தினார்கள். ஏப்ரல் மாதம் மீண்டும் யூனிட்டு 1000 ரூபாய் ஏற்றி அதை ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளார்கள். தற்போது 6000 ஆக உயர்த்தி ஆயிரம் ரூபாய் குறைத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். எந்த விதமான வரிகளும் உயர்த்தப்படவில்லை. கட்டுமான பொருட்களின் விலையை அவரவர் வசதிக்கு ஏற்ப எவ்வித காரணமும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி உயர்த்தி கொண்டே போகின்றனர்.
கட்டுமான பொறியாளர்களாகிய நாங்கள் சதுர அடி கட்டுவதற்கு ரூ.2300க்கு அக்ரிமெண்ட் போட்டால் அதை எங்களால் உயர்த்த முடியாது. அதே விலையில் தொடர்ந்து அந்தப் பணிகளை செய்வதால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு உரிமையாளர்கள் உபயோகிப்பாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் கொண்ட விலை நிர்ணயக் குழுவை உடனே அமைத்திட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.