தங்கத்தை விடவும் அரிதான, மதிப்பு மிக்க பொருளை கடனாக கொடுத்த சீனா
BBC Tamil May 12, 2025 03:48 PM
Tony Jolliffe/BBC News பூமியின் எந்த கலப்படமும் இல்லாமல் இந்த தூசிக் குப்பியை வைத்திருக்க வேண்டும்

நிலவின் முதல் கல் துகள் மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவிடம் இருந்து நிலவின் துகள் மாதிரிகள் பிரிட்டனுக்கு கடனாக வந்து சேர்ந்துள்ளன.

மில்டன் கீன்ஸ் பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு கட்டடம் ஒன்றில் உள்ள பாதுகாப்புப் பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்த இந்த தூசித் துகள்களை நாங்கள் முதன்முதலாகப் பார்த்தோம்.

பேராசிரியர் மகேஷ் ஆனந்த் தான் இந்த அரிதினும் அரிதான பொருளைக் கடனாகப் பெற்றிருக்கும் ஒரே பிரிட்டன் விஞ்ஞானி. 'தங்கத் துகள்களை விட மதிப்பு மிக்க பொருள் இது' என்கிறார் அவர்.

"சீனாவின் மாதிரிகளை உலகில் யாரும் நெருங்க முடியாது. அவை இங்கு வந்தது பெருமைக்குரிய விஷயம்," என்கிறார் அவர்.

Mahesh Anand இந்த மாதிரிகளைப் பெற்று வர சீனா வரை சென்றார் பேராசிரியர் மகேஷ் ஆனந்த் 'புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி பிறக்கும்'

லேசர் மூலம் இந்த துகள்களை ஆராய்ச்சி செய்து வரும் பேராசிரியர் ஆனந்தின் குழு, நிலவு எப்படி உருவானது, பூமியின் ஆரம்ப காலகட்டம் எப்படி இருந்தது போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தை ஒத்த அளவில் இருந்த கிரகம் ஒன்று பூமி மீது மோதிய பிறகு அதன் இடிபாடுகளில் இருந்து பிறந்ததுதான் நிலவு என்னும் விஞ்ஞானிகளின் கோட்பாட்டுக்கான ஆதாரம் இந்த தூசித் துகளின் உள்ளே கிடைக்கலாம்.

2020இல் சீனாவின் சேங்'இ 5 (Chang'e 5) விண்வெளிப் பயணத்தின் மூலமாக, மான்ஸ் ரும்கெர் எரிமலைப் பகுதியில் இருந்து இந்தக் கற்களை சேகரித்து வந்திருக்கிறது சீனா.

கிட்டத்தட்ட 2 கிலோவுக்கும் அதிகமான பொருளை ஒரு எந்திரக் கை மூலம் தோண்டி எடுத்து, பூமிக்கு ஒரு கலம் மூலமாக எடுத்து வந்தது சீனா. அந்த விண்கலம் மங்கோலியாவின் உட்பகுதியில் தரையிறங்கியது.

1976இல் சோவியத் விண்வெளிப் பயணங்களில் நிலவின் துகள் மாதிரிகள் கொண்டு வரப்பட்ட பிறகு சீனா 2020இல் எடுத்து வந்தது தான் அடுத்த மாதிரி. இந்தச் செயல்பாடு சீனாவை நவீன விண்வெளிப் பந்தயத்தில் முன்வரிசைக்கு உந்தியது.

உலகம் முழுவதும் இருக்கும் விண்வெளி விஞ்ஞானிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் நீண்ட பாரம்பரியம், உலகம் முழுவதும் உள்ள 7 ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த மாதிரிகள் கிடைக்க வழி செய்திருக்கிறது. அதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி பிறக்கும்.

Mahesh Anand துகள்கள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள்

பெய்ஜிங்கில் சென்ற வாரம் நடைபெற்ற விழாவில் பேராசிரியர் ஆனந்துக்கு நிலவின் துகள் நிரம்பிய குப்பி வழங்கப்பட்டது. அங்கு அவர் தன்னைப் போலவே இந்தத் துகள்களைப் பெறுவதற்காக ரஷ்யா, ஜப்பான், பாகிஸ்தான், ஐரோப்பாவிலிருந்து இருந்து வந்திருந்த சக விஞ்ஞானிகளைச் சந்தித்தார்.

"அது ஏதோ வேறு உலகம் போல இருந்தது - விண்வெளி திட்டங்களைப் பொருத்தவரை சீனா, பிரிட்டனைவிட பல மடங்கு முன்னேறியுள்ளது," என்றார் அவர்.

தனக்கு கிடைத்த விலைமதிப்பில்லாத பரிசை, தன்னுடைய கைப்பையிலேயே மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு பிரிட்டன் வந்தார் அவர்.

மில்டன் கீன்ஸ் பகுதியில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது பரிசோதனைக் கூடத்திற்கு நாம் சென்றதும் அங்கிருக்கும் காலணிகளை நன்றாகத் துடைத்து பிளாஸ்டிக் கையுறைகள், மேலுடைகள், தலையை மூடும் வலைகள் எனப் பலவற்றைப் போட்டுக் கொண்டோம்.

இந்த உயர் பாதுகாப்பு அறை மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது.

பூமிக்கு அப்பாற்பட்ட பகுதியில் இருந்து வந்திருக்கும் இந்தத் துகள்களுடன் பூமியைச் சேர்ந்த பொருள் ஏதாவது கலந்தால், அது பேராசியர் ஆனந்த் குழு செய்யும் ஆய்வை நிரந்தரமாகக் சீர்குலைத்துவிடக் கூடும்.

Getty Images சந்திரன் நிலாவின் தூசி

வரிசையாக வைக்கப்பட்டிருந்த பெட்டகங்களின் முன் நாங்கள் கீழே தரையில் அமர்ந்தோம். அவற்றில் ஒன்றைத் திறந்த பேராசிரியர் ஆனந்த் அதன் உள்ளே இருந்து ஸிப்லாக் பையை எடுத்தார். ஒரு நெக்லெஸ் வைக்கும் அளவிலான மூன்று பெட்டிகளை அதனுள் இருந்து எடுத்தார் அவர்.

ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு குப்பி இருந்தது. அவற்றுக்குள் கருஞ்சாம்பல் நிறத்தில் உள்ள துகள்களைக் காண முடிந்தது.

அவை நிலாவின் துகள் மாதிரிகள்

பார்ப்பதற்கு பெரிதாகத் தெரியாவிட்டாலும், அதன் விண்வெளிப் பயணத்தை நினைத்துப் பார்த்தால் நமக்கு பிரமிப்புதான் ஏற்படுகிறது. மொத்தமாக 60 மில்லிகிராமுக்கு மேல் தங்களுக்குத் தேவைப்படாது என்கிறார் அவர்.

"இங்கே சிறியதுதான் மிக அதிகமானது. எங்களது பல வருட ஆய்வுப் பணிகளுக்கு இது போதுமானது. நாங்கள் நுண்துகள்களில் வேலை செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்," என்கிறார் அவர்.

Tony Jolliffe/BBC News தொழில்நுட்ப வல்லுநர் கே நைட்

கே நைட் என்பவர் மற்றொரு ஆய்வுக்கூடத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர் . இந்தக் குப்பிகள் திறக்கப்பட்டதும் நிலவின் துகள்களில் வேலை செய்யப்போகும் முதல் நபர் அவர்தான்.

அவர் கடந்த 36 வருடங்களாக பாறைகளை அறுத்து, துகள்களாக மாற்றும் பணியைச் செய்து வருகிறார். ஆனால் நிலாவின் மேற்பரப்பில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்ட ஒன்றில் அவர் வேலை செய்யப்போவது இதுதான் முதல் முறை.

"நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்," என்ற அவர் ஒரு வைர பிளேடை வைத்து விண்கற்களை எப்படி அறுப்பார் என்று எங்களுக்கு செய்து காட்டினார்.

"ஆனால் எனக்குக் கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது, காரணம் நம்மிடம் அதிக அளவிலான துகள்கள் இல்லை. திரும்பப் போய் எடுத்துவர முடியாது. அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்," என்று கூறினார் அவர்.

இன்னும் இரண்டு ஆய்வுக்கூடங்களுக்கு அவை எடுத்துச் செல்லப்படும் என்கிறார் அவர்.

BBC News தான் சொந்தமாக தயாரித்த கருவியான Finesse உடன் ஷாஷா வெர்சோவ்ஸ்கி

அப்படிப்பட்ட ஆய்வுக்கூடம் ஒன்றில் எண்ணற்ற குழாய்கள், வால்வுகள், வயர்களுடன் மிக நுணுக்கமான வலைப்பின்னலைக் கொண்டிருந்த ஒரு கருவியைக் கண்டோம்.

கிட்டத்தட்ட 1990களில் இருந்து இந்தக் கருவியை உருவாக்கி வருகிறார் தொழில்நுட்ப வல்லுநர் ஷாஷா வெர்சோவ்ஸ்கி. அதில் இருக்கும் ஒரு சிறிய சிலிண்டரை நம்மிடம் காட்டுகிறார்.

அதில் இந்தத் துகள்களை 1400 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்க முடியும். இதில் இருந்து கார்பன், நைட்ரஜன் மற்றும் சில வாயுக்களை பிரித்தெடுக்க முடியும்.

இது மிகவும் தனித்தன்மை வாய்ந்த கருவி. தன்னுடைய ஆய்வகத்திற்கு இந்த அரிதான மாதிரிகள் கிடைக்க இந்தக் கருவியும் ஒரு காரணம் என்று நம்புகிறார் பேராசிரியர் ஆனந்த்.

Tony Jolliffe/BBC News நிலாவின் துகள்களைப் பரிசோதனை செய்யப் பயன்படுத்தும் இன்குபேட்டர் போன்ற கருவி

ஆய்வாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநரான ஜேம்ஸ் மாலி, இந்தத் துகள்களுக்குள் எவ்வளவு ஆக்ஸிஜன் இருக்கிறது என்று கண்டுபிடிக்கும் கருவியை இயக்கப் போகிறார்.

தான் செய்யப் போவதை நமக்கு பரிசோதனை ஓட்டமாகச் செய்து காட்டினார் அவர்.

"இந்த தட்டில் துகள்களை வைத்து அதில் லேசரைப் பாய்ச்சுவேன்," என்ற அவர், அந்தக் காட்சி கணினித் திரையில் பெரிதாவதைக் காட்டினார்.

"அது மெல்லமெல்ல ஒளிர ஆரம்பித்து பின்னர் உள்ளூர உருகத் தொடங்குவதைப் பார்க்கலாம்," என்றார் அவர்.

Tony Jolliffe/BBC News சீனா எடுத்து வந்துள்ள நிலவின் துகள் மாதிரிகள் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக் வழிவகுக்கும் என நம்புகிறார்

இந்த ஆய்வை செய்வதற்கு இந்தக் குழுவிடம் ஒரு வருடம் இருக்கிறது. அது முடியும் சமயத்தில் அவர்களிடம் இருக்கும் மாதிரிகள் மொத்தமும் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் சேங்'இ 5 திட்டத்திற்குப் பிறகு சீனா அதிக தூரம் சென்றுவிட்டது.

2024ஆம் வருடம் சேங்'இ 6 நிலவின் அடுத்த பக்கத்தில் இருந்து மாதிரிகளை எடுத்து வந்தது. நிலவில் முன்பு எரிமலைக் குழம்பு ஓடியதற்கான ஆதாரம் இந்த ஆழமான மர்மமான பகுதியில் கிடைக்கலாம்.

"சீனா மற்றும் சர்வதேச விஞ்ஞானிகளுக்கு இடையிலான நெடுநாள் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கான ஆரம்பமாக இது இருக்கும்," என்று கூறுகிறார் பேராசிரியர் ஆனந்த்.

"அப்போலோ பயணங்களில் கொண்டு வரப்பட்ட நிலவின் துகள் மாதிரிகளில் இருந்துதான் எங்களில் பலர் தங்கள் தொழில்வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொண்டார்கள். இது ஒரு அருமையான பாரம்பரியம். மற்ற நாடுகளும் இதே விஷயத்தைப் பின்பற்றும் என்று நம்புகிறேன்," என்றார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.