என்ஜினீயரிங்கில் புது புது பாடப்பிரிவுகள் வந்ததால் சிவில், மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கான மவுசு குறைந்துவிட்டது. இதனால் கர்நாடகத்தில் மேற்கண்ட பிரிவினை மாணவர்கள் போதிய அளவில் தேர்வு செய்வதில்லை.
இதன் காரணமாக கல்லூரிகளில் காலியிடங்கள் அதிகரித்தன. இந்த பிரச்சனை தொடர்பாக அண்மையில் கர்நாடக மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் சுதாகரிடம் தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் முறையிட்டனர்.
கணினி சார்ந்த என்ஜினீயரிங் படிப்புகளில் மாணவர்களின் மோகம் அதிகரித்ததால் சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் போன்ற பாரம்பரிய பிரிவுகளில் மாணவர்கள் அதிகம் சேர்வதில்லை என்று தனியார் என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் முறையிடப்பட்டது. இதனால் பாரம்பரிய என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கட்டணத்தை குறைக்க மாநில அரசு முடிவு செய்தது.
பின்னர், செய்தியாளர்களிடம் மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் சுதாகர் கூறியதாவது: சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல் உள்ளிட்ட என்ஜினீயரிங் பாடப்பிரிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த பாடப்பிரிவுகளை நீர்த்து போக செய்து விடக்கூடாது. பல்வேறு காரணங்களால் இந்தப் படிப்புகளின் மீது மாணவர்களுக்கு மோகம் இல்லாமல் இருக்கலாம்.
ஒருவேளை மாணவர்கள் மேற்கண்ட பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய விரும்பினாலும், அதற்கான கட்டணம் அதிக அளவில் இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மாநில அரசின் கவனத்திற்கு செய்தி வந்தது. தற்போது அரசு பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுக்கு என்ஜினீயரிங் படிப்புக்கு 48,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளும் கட்டணத்தை குறைக்க முடிவு செய்தால், அது தொடர்பான விவரத்தை கர்நாடக தேர்வு ஆணைய வலைதளத்தில் தெரியப்படுத்த வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். பிளஸ்-2 மாணவர்களுக்கு கவுன்சிலிங் தொடங்குவதற்கு முன்பாகவே இணைய பக்கத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகள் கட்டண விவரத்தை தெரியப்படுத்த வேண்டும் என அமைச்சர் சுதாகர் அறிவுறுத்தினார்.