கயிற்றால் மகளின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (50) ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி செல்வி (45). இவர்களுடைய மகள்கள் ரஞ்சனி (19), சந்தியா (17). இதில், ரஞ்சனி பி.எஸ்சி. நர்சிங் படித்து வருகிறார். சந்தியா சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 520 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தார்.
இந்நிலையில் ரவி அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால் செல்வி, மகள் ரஞ்சனி ஆகியோர் வீட்டு வேலைகளை கவனித்து வந்தனர். இளைய மகள் சந்தியா வீட்டில் சமையல் செய்து தனது தந்தை மூலம் தாயார் மற்றும் அக்காளுக்கு அனுப்பி வந்துள்ளார்.
நேற்று மதியம் வெகுநேரமாகியும் வீட்டிலிருந்து உணவு வராததால் செல்வியும், ரஞ்சனியும் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது சந்தியா கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டும், ரவி தூக்கில் தொங்கியவாறும் சடலமாக கிடந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அலறி துடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், தந்தை-மகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ரவி தனது மகளை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.